தமிழ்நாடு
அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் சோதனை நிறைவு: ரூ.11.80 லட்சம் பறிமுதல்
அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் சோதனை நிறைவு: ரூ.11.80 லட்சம் பறிமுதல்
சென்னையில் அதிமுக நிர்வாகியும் மாநகராட்சி ஒப்பந்ததாரருமான வெற்றிவேல் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 12 மணிநேரத்திற்கு மேல் சோதனை நடத்தினர். இதில் சுமார் 12 லட்சம் ரூபாய், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள வெற்றிவேல் வீட்டில் நேற்று மாலை தொடங்கிய சோதனை இன்று காலை நிறைவு பெற்றது. வெற்றிவேல் மாநகராட்சியில் எத்தனை ஒப்பந்தங்களை எடுத்துள்ளார், அதில் விதிகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா என்பன உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக 346 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரில் வெற்றிவேல் தொடர்பான ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், வெற்றிவேல் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 80ஆ யிரம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி மாநகராட்சியில் ஒப்பந்தங்கள் பெற்றதாக புகாருக்குள்ளான மற்ற ஒப்பந்ததரார்கள் வீட்டிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளது. தற்போது சோதனைக்கு ஆளான வெற்றிவேல் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் முன்னாள் உதவியாளர் என்பதும் தெரியவந்துள்ளது.