”வாக்கி டாக்கி ஊழல் தொடர்பாக 144 ஆவணங்கள் கிடைத்துள்ளது” - நீதிமன்றத்தில் அரசு சொன்ன தகவல்

”வாக்கி டாக்கி ஊழல் தொடர்பாக 144 ஆவணங்கள் கிடைத்துள்ளது” - நீதிமன்றத்தில் அரசு சொன்ன தகவல்
”வாக்கி டாக்கி ஊழல் தொடர்பாக 144 ஆவணங்கள் கிடைத்துள்ளது” - நீதிமன்றத்தில் அரசு சொன்ன தகவல்

மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் 35.72 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது தொடர்பான 144 ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மதுரைக்கிளையில் தகவல் தெரிவித்திருக்கிறது.

மதுரையைச் சேர்ந்த மோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்னாள் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2011 ஆம் ஆண்டு எல்லை தாண்டும் மீனவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அதிநவீன வசதி கொண்ட வாக்கி-டாக்கி மீனவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு 57 கோடி ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி 3 டவர்கள் அமைக்கப்பட்டு 3100 வாக்கி டாக்கி வழங்க திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இதே திட்டம் 2008 ஆம் ஆண்டு 7 கோடி ரூபாய் செலவில் அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்பின்பு அமைந்த புதிய அரசு இத்திட்டத்திற்காக 57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால், 2011 ஆம் ஆண்டு மீனவர்களுக்கு வழங்கிய வாக்கி டாக்கி திட்டத்தில் 37 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால் இந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை. தற்போது வரை இந்த ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடைபெறவில்லை.

இதுகுறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விசாரணை செய்ய மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் நடவடிக்கை எடுத்ததாய் தெரியவில்லை. எனவே, மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து உடனடியாக விசாரணை செய்து முடிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், "மீனவர்கள் பயன்பாட்டிற்கான அதிநவீன வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக பல புகார்கள் வந்துள்ளன. விசாரணையில் வாக்கி டாக்கி வாங்கியதில் அரசுக்கு 35.72 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக வந்த புகார் தொடர்பாக 144 ஆவணங்கள் கிடைத்துள்ளன. இந்த ஊழல் புகார் அடிப்படையில் விரிவான விசாரணைக்காக பதியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையை முடிக்க 3 மாத கால அவகாசம் தேவை " எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுதாரர் மனுவை திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com