"உதயநிதி நீட் தேர்வு பற்றி பேசுவது மாணவர்களை இழிவுபடுத்தும் அசிங்கமான செயல்"- அண்ணாமலை

"உதயநிதி நீட் தேர்வு பற்றி பேசுவது மாணவர்களை இழிவுபடுத்தும் அசிங்கமான செயல்"- அண்ணாமலை
"உதயநிதி நீட் தேர்வு பற்றி பேசுவது மாணவர்களை இழிவுபடுத்தும் அசிங்கமான செயல்"- அண்ணாமலை

''தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே வேலம்பட்டியில், கடந்த மாதம் எட்டாம் தேதி திமுக கவுன்சிலர் ஒருவர் தாக்கியதில் ராணுவ வீரர் பிரபு என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் ராணுவ வீரர் கொலை சம்பவம் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பிரபுவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் பாஜக சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ராணுவ வீரர் பிரபுவின் வீட்டிற்கு நேரில் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ''திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் தாக்கப்பட்டு உயிரிழந்தது, தமிழக மக்களின் மனநிலையை பெரிதும் பாதித்தது. ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஐந்து கோடி நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தி வந்தோம். இன்று 10 லட்ச ரூபாய் பிரபுவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வர் இனியாவது இந்த பிரச்சனையில் செவி சாய்ப்பார் என நம்புகிறேன். இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை.

ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ஐந்து கோடி ரூபாய் நிதி உதவி மாநில அரசு வழங்க வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை. தமிழக அரசு இதனை முன் நின்று செய்ய வேண்டும். ராணுவ வீரர் கொலை சம்பவம் அதிகபட்ச குற்றம் என்பதால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ‘சாதாரண வழக்குகளில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தில் போடுகின்றனர்... ஆனால் இந்த கொலை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவில்லை’ என அவரது உறவினர்கள் கேட்கின்றனர். ராணுவ வீரர் கொலை சம்பவத்தில் காவல்துறை முறையாக செயல்படவில்லை, ராணுவ வீரர் உயிரிழந்த பிறகு தான் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளி காவல்துறையை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுப்பதில் காவல்துறையினர் மெத்தனமாக இருந்து விட்டனர். இதில் காவல்துறை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரி வருகிறேன். அப்படி வெளியிட்டால் நீட் தேர்வு மூலம் எத்தனை பேர் சென்றுள்ளனர் என தெரிய வரும். யார், யாரை சென்று பார்த்தாலும் கூட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்யாது. நீட் தேர்வு தொடர்ந்து இருக்கும். அதனை உறுதியாக சொல்கிறோம். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தோல்வி அடைவதாக மாயையை ஏற்படுத்தினார்கள். நீட் பயிற்சி மையத்தை மாநில அரசு நிறுத்தியது. திமுக அரசு கடந்த 23 மாதங்களில் நீட் தேர்வு தொடர்பாக முன்னுக்கு புறம்பாக பேசி வருகின்றனர். 

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ‘நீட் தேர்வுக்கு நீங்கள் தயாராகி விட்டீர்கள். தேசிய அளவில் மதிப்பெண் வாங்க தொடங்கி விட்டீர்கள்’. படிக்காத அரசியல்வாதிகள், உயர்கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், உங்களுக்கு முன்மாதிரி அல்ல. அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் தகுதி இல்லை. தமிழகத்தில் தற்போது உள்ள கல்வித்துறை அமைச்சரின் தகுதி என்ன? அவர்களது பூர்வீகம் என்ன? அவர் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவரா? அரசு பள்ளியில் படித்தவரா? பெரிய குடும்பத்தில் பிறந்தவர் மட்டுமே அவரது தகுதி. உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என சொல்கிறார். அவர் யார், அவரது தாத்தா யார், அவர் எங்கு படித்தார், எந்த கல்லூரியில் படித்தார்? அவரெல்லாம் நீட் தேர்வு பற்றி பேசுவது மாணவர்களை இழிவுபடுத்தும் அசிங்கமான செயல். இன்றைக்கு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவக் கல்லூரி இடங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு தோல்வியால் இன்னொரு உயிரிழப்பு தமிழகத்தில் நடக்கக்கூடாது. தமிழக அரசு அனுப்பியுள்ள நீட்  தேர்வு ரத்து மசோதாவை குடியரசுத் தலைவர் வேகமாக ரத்து செய்வார் என்கிற நம்பிக்கை பாஜகவுக்கு உள்ளது. தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வர மாட்டேன் என தெரிவித்து வருகிறது. கண்ணை மூடிக்கொண்டு குருடர்களாக தமிழக அமைச்சர்கள் உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. மாநில சுயாட்சி என மாணவர்களை இந்த அரசு முட்டாளாக்கி வருவது இந்த அரசின் நோக்கம்.

பீகார் மாநில பாஜக தலைவர் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார். அதற்கு நாங்கள் தெரிவித்தோம், வடமாநில தொழிலாளர்களை தமிழக காவல்துறையும்  தமிழக அரசும் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர், தமிழ்நாட்டின் மேல் இப்படி ஒரு அவப்பெயர் வருவதை நான் விடமாட்டேன். சமூக வலைத்தளங்களில் தமிழக மக்களுக்கு அவப்பெயர் வரும் வகையில் செயல்படுகின்றனர். அதனை ஒருபோதும் நாங்கள் விட மாட்டோம். வட மாநில தொழிலாளர்களை தமிழகம் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசுடன் முழு ஒற்றுமையுடன் உள்ளோம்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com