“ஆயிரம் ரூபாய் வந்துவிட்டதென நினைக்க வேண்டாம்” - அண்ணாமலை பேச்சு

“இந்தியாவை பற்றி வெளிநாட்டில் தவறாக பேசும் ராகுல் காந்திக்கும், இந்து தர்மத்தை தவறாக பேசும் உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு போட வேண்டும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
Annamalai  | BJP
Annamalai | BJPpt desk

திண்டுக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர்...

“70 ஆண்டுகளாக ஒரு குடும்பத்திற்கான அரசியலாகத்தான் இருந்து வந்துள்ளது. மூன்றாம் தலைமுறையாக திராவிட அரசியல் உள்ளது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என மூன்று தலைமுறைகளை பார்த்துள்ளனர். எனவே ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். படிப்பிற்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ப ஊதியம் என்பதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். சிரமப்பட்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் ஒரு குடும்பத்தில் பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக சிலர் அரசியலில் உள்ளனர். இதை உடைத்து காட்டப்போகிறோம். மாற்றம் வேண்டும் என்ற குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

PM Modi
PM Modi Twitter

உழைக்கும் வர்க்கம் அதிகமாக உள்ள ஊர் திண்டுக்கல். ஒரு காலத்தில் திண்டீஸ்வரம் என அழைக்கப்பட்டது. பிற மாநிலத்தில் கூட திண்டுக்கல் என்றால் பூட்டு என மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பூட்டு என்பது வார்த்தை இல்லை. அது நம்பிக்கை. வரும் வழியில் இரண்டு பூட்டுகளை கொடுத்தார்கள். ஒன்று திமுகவிற்கு போடும் பூட்டு. மற்றொன்று காங்கிரஸ்க்கு போடும் பூட்டு. திமுக குடும்ப ஆட்சியில் இருக்கும் ஒருவருக்கும், காங்கிரஸ் குடும்பத்தில் ராகுலுக்கும் பூட்டுபோட வேண்டும். ராகுல், வெளிநாட்டுக்கு போய் இந்தியா மீது குற்றச்சாட்டு வைப்பவர். கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாதவர்.

திப்பு சுல்தானால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை. ஆனால் அறியா குழந்தை (அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சாடி) பேசியதற்காக இரண்டாவது பூட்டுபோட வேண்டும். ஆக இந்தியாவை பற்றி தவறாக பேசும் ராகுல்காந்தி, இந்து தர்மத்தை பற்றி தவறாக பேசும் உதயநிதிக்கும் திண்டுக்கல் பூட்டு போடவேண்டும். திண்டுக்கல் பூட்டுக்கு 2019ல் புவிசார் குறியீடு கொடுத்தவர் பிரதமர் நரேந்திரமோடி.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்ட்விட்டர்

சந்திரயான் 3க்கு டெலிகமெண்ட் சாப்ட்வேர் எழுதியவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவுரிமணி ராமராஜன். இதனால் திண்டுக்கல்லுக்கு பெருமை. ஐ போன் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய போனை வெளியிட்டுள்ளனர். அதில் நாம் விண்வெளிக்கு அனுப்பிவைத்த சேட்டிலைட் மூலம் ஜி.பி.எஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. நமது மூதாதையர் காலத்தில் இந்தியாதான் உலகளவில் முதல் நாடு என இருந்தது. 2022 முதல் 2047 வரையிலான 25 ஆண்டுகள், இந்தியாவின் ஆண்டு. 2047 இந்தியா உலகில் முதன்மை நாடாக மாறும்.

ஏழைகளின் முன்னேற்றத்திற்காக முதல் ஐந்து ஆண்டுகள் நடந்தது. அடுத்த ஐந்தாண்டு உள் கட்டமைப்புக்காக நடந்துள்ளது. 2024 முதல் 2031 வரை தனிமனித பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளில் தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தபோது உலகில் 11வது பொருளாதார நாடாக இருந்ததோம். தற்போது 5வது நாடாக உள்ளது. அடுத்து ஜப்பான், ஜெர்மனியை முந்தி 3வது இடத்திற்குச் செல்ல வேண்டும். நாட்டில் ஊழல் இருந்ததால் இந்த நாடு முன்னேற முடியவில்லை. லஞ்ச லாவண்யம் இல்லாமல் மத்திய அரசு நடக்கிறது. பிரதமர் உள்ளிட்ட 79 மத்திய அமைச்சர்கள் அனைவரும் நேர்மையாக உள்ளனர்.

Rahul Gandhi
Rahul Gandhi PTI

சாதியை வைத்து அரசியல் செய்தது, பணத்தை வைத்து அரசியல் செய்தது ஒரு காலம். இப்போதெல்லாம் ஊழல் இல்லாமல் இருக்கும் அரசியல்வாதிக்குதான் எங்கள் ஆதரவு என பெண்கள் நினைக்கிறார்கள். இப்போதெல்லாம் விடுப்பு எடுக்காமல் யாரும் வேலை செய்வதில்லை. ஆனால் கடந்த 23 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்துள்ளார் பிரதமர் மோடி. பாரதிய ஜனதா கட்சி பற்றி புரிந்து கொள்ள திமுகவிற்கு வாய்ப்பில்லை.

மகளிர் உரிமைத் தொகை அமாவசையன்று ஒரு ரூபாய் போட்டு துவக்கியுள்ளார் தந்தை (முதல்வர் மு.க.ஸ்டாலின்). மகன் சனாதனத்தை எதிர்க்கிறார். என்ன களவாணி தனம். உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசுவது. 2.25 கோடி குடும்ப அட்டை உள்ளது. ஒரு கோடியே ஆறு லட்சம் பேருக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறார்கள். திமுகவிற்கு மூன்று குறிக்கோள் தான். சாராயத்தை விற்போம். சனாதனத்தை ஒழிப்போம். தேர்தல் வரும்போது பல்டி அடிப்போம். சனாதனம் என்றால் அகிம்சையை நினைக்கக் கூடியவர்கள் பின்பற்றும் தர்மம்.

udayanithi
udayanithipt desk

நரேந்திர மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பத்து ஊழல் பட்டியல்களை ஆதாரபூர்வமாக வெளியிட்டுள்ளோம். இங்கு பத்து திமுக அமைச்சர்கள் ஊழல்வாதிகள். இன்னும் 21 ஆக மாறும். உண்மையான திருடன் திமுக. ஊழலுக்கு இலக்கணமாக இருக்கும். திமுகவை 2024 மக்களவை தேர்தலில் வேரோடு எரிய வேண்டும்.

இன்றைக்கு சில பெண்கள் மகளிர் உரிமைத்தொகைக்காக சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சொத்துவரி, மின்கட்டணம், பத்திரபதிவு என பல கட்டணங்களை உயர்த்தி விட்டனர்.

ஆகவே ஆயிரம் ரூபாய் வந்தது என நினைத்து விட வேண்டாம். திமுகவை பொறுத்தவரை ஒத்தையாக கொடுத்து மொத்தமாக பிடுங்குவார்கள். 2024 உங்களுக்கான தேர்தல் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கான தேர்தல். ஊழல் இல்லாத இந்தியாவை முழுமையாக பார்க்க வேண்டுமா? அதற்கான தேர்தல்! குடும்ப அரசியல், ஊழல் அரசியலை ஒழித்துக் கட்ட வேண்டும். ஒரு தேர்தல் வருதா இரண்டு தேர்தல் வருதா என்று எனக்குத் தெரியாது” என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com