“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதென்பது தமிழக முதல்வருக்கு கனவாக மட்டுமே இருக்கும்” - அண்ணாமலை

”27 வயது தேஜஸ்வி யாதவ்வைக் கொண்டு கலைஞர் கூடத்தைத் திறந்து வைத்து கலைஞருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர்.” - அண்ணாமலை
ஸ்டாலின், அண்ணாமலை
ஸ்டாலின், அண்ணாமலைபுதிய தலைமுறை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மகாபலிபுரம் ராஜா தெரு வெண்ணெய் பந்து அருகாமையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். தொடர்ந்து சிறுவர்களின் மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 3 சிறுமிகள் மல்லர் கம்பத்தில் இருந்தபடி யோகாசனம் செய்து அசத்தினர்.

தொடர்ந்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஜூன் 21- யோகா தினமாக கடைபிடிக்க வேண்டும் என ஐ.நா.சபையில் இந்தியா வைத்ததன் கோரிக்கையின் அடிப்படையில், சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.சபையில் 190 நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். யோகாவை சரித்திரம் வாய்ந்த இடத்தில் செய்வது சிறப்பு.

இங்கிலாந்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் கலந்து கொள்வதற்காக நான் செல்கிறேன். இலங்கைத் தமிழர்களை மூன்று நிகழ்ச்சிகளில் சந்திக்கிறேன். கடந்த மூன்று மாத காலமாக மத்திய அரசு தொடர்பாக தமிழக முதல்வர் பேச ஆரம்பித்திருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக அரசின் ஆட்சி, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது முதல்வருக்கு தெரியும். மக்கள் யாரும் தி.மு.க. ஆட்சியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை.

அதனை மறைப்பதற்காக மத்திய அரசின் மீது தமிழக அரசு வேண்டுமென்றே பழிபோடுகிறது. நேற்று நடைபெற்ற திருவாரூர் கூட்டமே அதற்கு சாட்சி. முதலில் குடியரசுத்தலைவர் வருவார் என தெரிவித்தார்கள். ஆனால் அவர் வரவில்லை. அடுத்து பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் வருவார் என தெரிவித்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக அவர் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. கடைசியில் பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டுள்ளார்.

அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பில் தி.மு.க. தோல்வி அடைந்திருக்கிறது என்பது நேற்று நிதீஷ் குமார் தமிழகம் வராதது வெளிக்காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது என்பது தமிழக முதல்வருக்கு கனவாக மட்டுமே இருக்கும். மக்கள் பாரதிய ஜனதா கட்சியை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். மூன்றாவது முறையாக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையும். அகில இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 39 எம்பிக்கள் உட்பட நானூறு எம்பிக்களின் ஆதரவும், பாஜகவுக்கு கிடைக்கும்.

‘மாநில மனித உரிமை ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. அரசு மருத்துவமனையில் எங்களது அமைச்சர்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என அரசு சொல்கிறது அப்படி என்றால் சாமானியர்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்? தமிழகத்தில் அரசு எந்திரம் ஒட்டுமொத்தமாக தோற்றுவிட்டது என்பது செந்தில் பாலாஜி கைது விவகாரம் உள்ளிட்டவைகள் காட்டுகிறது ” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com