“திமுக ஃபைல்ஸ் பாகம்-2: அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்ற அமைச்சர்களே அதிகம் இருப்பர்” - அண்ணாமலை

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடந்த அவதூறு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைPT Desk

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக ஃபைல்ஸ் எனக் கூறி திமுகவில் முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் உள்ளடங்கிய சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறியிருப்பதாகவும், ஆதாரமற்ற குற்றங்களை தெரிவித்திருப்பதாகவும் கூறி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தார், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா ஆனந்த், ஜூலை 14ஆம் தேதி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

MP TR Balu
MP TR Balupt desk

அதன் அடிப்படையில் இன்று அண்ணாமலை சைதாப்பேட்டையில் உள்ள 17 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா ஆனந்த் முன்னிலையில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியபோது...

“டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானேன். ஏப்ரல் 14ஆம் தேதி திமுக ஃபைல்ஸ் பாகம் ஒன்றை நான் வெளியிட்டது, அக்கட்சியில் பல பேருக்கு கோபத்தை உண்டாக்கியது. DMK Files பாகம் ஒன்று வந்த பிறகு முதலமைச்சர், திமுக எம்பிக்கள் உட்பட பலர் வேற வேற ரூபத்தில் எனக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்கள். இதற்கெல்லாம் வாய் பேசாமல், அறிக்கையாக இல்லாமல் நீதிமன்றத்தில் அனைத்தையும் சந்திக்க தயாராக வந்துள்ளேன்.

பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளது.

டி.ஆர்.பாலு இதற்கு முன்பு நீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்துள்ளார். அதன் நகலை இன்று கொடுத்தார்கள். அந்த நகலில் பல பொய்களை டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். நீதிமன்றத்தின் முன்பு கொடுத்துள்ள சத்திய பிரமாணத்தில் பல பொய்கள் உள்ளன. டி.ஆர்.பாலு 2004 முதல் 2009 வரை ஊழல் செய்ததற்காகதான் 2009 ஆம் ஆண்டு அமைச்சரவையில் அவருக்கு இடமில்லாமல் போனது. இதை தெரிவித்ததை கூட அவர் அவதூறு வழக்கில் சேர்த்துள்ளார்.

MK Stalin
MK StalinFile photo

அழகிரி அவர்கள் 2014 ஏப்ரல் மாதத்தில் பேசியபோது ‘மதுரையில் டி.ஆர்.பாலு எவ்வளவு ஊழலில் ஈடுபட்டார், எத்தனை கப்பல்கள் வைத்துள்ளார், சேது சமுத்திர திட்டத்தில் எவ்வளவு சம்பாதித்தார்... எல்லாம் எனக்கு தெரியும்’ என்றார். ஆக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் அழகிரி, நான் இப்போது சொன்ன குற்றச்சாட்டை 2014 ஆம் ஆண்டே தெரிவித்துள்ளார். அதற்கு இதுவரை அழகிரி மீது எந்த வழக்கையும் டி.ஆர்.பாலு தொடரவில்லை. அவர் மீது எந்த அவமதிப்பு வழக்கும் போடவில்லை.

சத்திய பிரமாணத்தில் மூன்று நிறுவனத்தில் மட்டும் தான் எனக்கு பங்கு இருக்கிறது, மிச்ச நிறுவனத்தில் இல்லை என்று கூறியுள்ளார். திமுக ஃபைல்ஸ் பாகம் ஒன்றில் தெளிவாக சொல்லியிருக்கிறோம் டி.ஆர்.பாலு, அவரது மகன், மருமகள் உள்ளிட்டோர்வசம் மொத்தமாக 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து வந்துள்ளது.

இது எல்லாம் எங்கிருந்து வந்தது என கேள்வி கூட எழுப்பியுள்ளோம். ஆனால் அவருடைய சத்திய பிரமாணத்தில் இதையெல்லாம் மறைத்து அரைகுறையாக கூறி நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். பல பொய்களை சத்திய பிரமாணத்தில் தெரிவித்துள்ளார். இது ஊழலுக்கு எதிரான போராட்டம். ஒன்று இரண்டு நாளில் முடியப் போவதில்லை. பெரிய யுத்தமாக இருக்கும். அதற்கு தயாராகத்தான் வந்துள்ளேன்.

senthilbalaji, ed
senthilbalaji, edpt web

டி ஆர் பாலுவின் குடும்பம் மொத்தமும் கூண்டில் ஏற வேண்டும். எங்களுடைய கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அவர்களுடைய கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லுவோம். இந்தப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் மீண்டும் ஆஜராக உள்ளேன். அப்பொழுது நடைபயணத்தில் இருப்பேன். இதற்காக ஒரு நாள் ஒதுக்கி நீதிமன்றத்தில் ஆஜராவேன். நாங்கள் எந்த அமைச்சரையும் போல நள்ளிரவில் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கும்படி சொல்லக் கூடியவர்கள் இல்லை. எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லுவோம்.

திமுக பாகம் 2 தயாராக உள்ளது. அதில் உள்ளவையாவும் பினாமி சொத்துக்கள். கிட்டத்தட்ட பினாமிகளின் பெயர்கள் மட்டுமே 300-க்கு மேல் வருகிறது. பினாமிகளின் பெயரை பொதுவெளியில் வெளியிடுவதா, இல்லை ஆளுநரிடம் கொடுப்பதா அல்லது பொதுவாக வெளியிடுவதா என்று யோசித்து வருகிறோம். சிபிஐக்கு மாநில அரசு கொடுத்திருக்கக் கூடிய அந்தஸ்தை மாநில அரசே இப்ப்போது எடுத்து விட்டது. நம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மீதும் சிபிஐயில் புகார் கொடுத்துள்ளோம். அப்படியான சூழலில் சிபிஐ எடுத்து விட்டால் நாம் தப்பித்து விடலாம் என முதல்வர் எண்ணிக் கொண்டுள்ளார்

எப்படி இருந்தாலும் திமுக பைல்ஸ் பாகத்தை இரண்டு பாதையாத்திரைக்கு முன்பு வெளியிட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அது நிச்சயமாக நடக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பாதயாத்திரை நடக்க நடக்க பார்ட் 3, பார்ட் 4 வெளியாகும். இந்த பார்ட் 2-வில் உள்ள பல பினாமிகள் தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார்கள்.

Annamalai
AnnamalaiPT

பினாமிகள் பெயரை சொல்லலாமா வேண்டாமா என எங்களது வழக்கறிஞர் குழு முடிவு எடுப்பார்கள். பாதையாத்திரைக்கு முன்பு இதை நிச்சயமாக செய்து காட்டுவோம். பினாமியில் வந்துள்ள அனைவருமே புதிய அமைச்சர்கள் தான். அதிலும் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் தான் பாகம் இரண்டில் உள்ளார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com