annamalai
annamalaiweb

‘மாணவ சமுதாயத்திடம் ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாக செயல்பட வேண்டாம்’ - அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

கல்விக் கடனை அரசே செலுத்தும் என கூறி மாணவர்களை ஏமாற்றிவிட்டதாக திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
Published on

தமிழக அரசின் ஆளுங்கட்சியான திமுக அரசு, தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் ஒன்றாக மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை முக்கியமானதாக அறிவித்திருந்தது.

அது சார்ந்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் “ஆதி திராவிட மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது” என திமுக தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆதி திராவிட மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி..

தமிழக அரசின் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு படி, “ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு

  • 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும்,

  • 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும்

வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்யப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “நிலுவைத் தொகையை மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும்,

வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும்,

வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும்,

ரூ.48,95,00,000/-ஐ சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

annamalai
ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு!

சாதிப் பாகுபாடை தூண்ட வேண்டாம்..

தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து பதிவிட்டிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கல்விக் கடன் ரூ.48.95 கோடி ரத்து என்று அறிவித்துள்ளது திமுக அரசு. ஒவ்வொரு தேர்தலின்போதும், அலங்கார வாக்குறுதியாக, கல்விக் கடன் ரத்து என்று நாடகமாடி ஏமாற்றுவது, திமுகவின் வழக்கம். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை, தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவை மொத்தம் ரூ. 16,302 கோடி. இந்த நிலையில் வெறும் ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன்?

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159ல், மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே திருப்பிச் செலுத்தும் என்று கூறி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பி, கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தாமல், கடந்த 2023 ஆம் ஆண்டு, வாராக்கடனாக, ரூ. 4,124 கோடி அறிவிக்கப்பட்டு, அதனால் வழக்குகளைச் சந்தித்தும், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்காமலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.

தற்போது, கடனை வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண முடியாததால் கல்விக் கடனை ரத்து செய்கிறோம் என்று திமுக அரசு காரணம் கூறியிருப்பது நகைப்பிற்குரியது. கல்விக் கடனை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நம்பிக் காத்துக்கொண்டிருந்த மாணவ சமுதாயம், ஓடி, ஒளிந்து, தலைமறைவானால்தான் கடனை ரத்து செய்வோம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக.

நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான். இதற்குக் காரணம், இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் பலப்பல தேர்தல்களாகத் தொடர்ந்து ஏமாற்றி வருவதுதான். திமுகவின் பொய்களுக்கு, இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா?

உடனடியாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதன்படி, தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக் கடன்களையும் ரத்து செய்து, தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com