`சட்டசபையில் சட்டையை கிழித்து வந்தபோது, ஆளுநரைதான் ஸ்டாலின் முதலில் சந்தித்தார்'- அண்ணாமலை

`சட்டசபையில் சட்டையை கிழித்து வந்தபோது, ஆளுநரைதான் ஸ்டாலின் முதலில் சந்தித்தார்'- அண்ணாமலை
`சட்டசபையில் சட்டையை கிழித்து வந்தபோது, ஆளுநரைதான் ஸ்டாலின் முதலில் சந்தித்தார்'- அண்ணாமலை

பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விழாவிற்கு சென்னை வந்த போது, தமிழக அரசு அவருக்கு சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என்றும் மெட்டல் டிடெக்டர் சரியாக செயல்படவில்லை என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் இதுகுறித்து ஆளுநரிடம் முறையிட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோரிக்கை வைத்தார். அவரோடு மாநில பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன், கீதா வெங்கடேசன், கேபி ராமலிங்கம் அண்ணாமலையோடு ஆளுநர் சந்திப்பில் உடன் இருந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது, ''வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 69 லட்சம் பயனாளர்களுக்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது. லஞ்சம் பெருகி உள்ளது. சில இடங்களில் வெறும் குழாய் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரவில்லை. உதாரணத்துக்கு திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடைந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் நிதியில் இந்த திட்டம் முழுக்க முழுக்க மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் கவர்னரிடம் வைத்துள்ளோம். பிரதமர் பாதுகாப்பில் நேர்த்தியான பணி செய்யவில்லை. மாநில அரசு மெத்தனமாக இருந்ததால், அதிகாரிகளும் மெத்தனமாகவும் இருந்துள்ளனர்.

இவற்றுடன் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக எங்கள் கருத்தையும் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். இதனால் மக்கள் பாதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவசர சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் அதனால் எந்த உயிரிழப்பும் போவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமரை கண்காணிப்பது மட்டும்தான் எஸ்பிஜி-யின் வேலை. வெளி பாதுகாப்பு வளையத்தை தர வேண்டியது காவல்துறையின் பணி. மேலே இருக்கும் உயர் அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சிக்காக பணிபுரிகிறார்கள். தீவிரவாத தாக்குதல் என்றால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கே நமது மாநில அரசு தயாராக இல்லை.

அரசியல் கால்புணர்ச்சிக்காக திமுக தொடர்ந்து ஆளுநரை குற்றம் சாட்டி வருகிறார்கள். அவசர சட்டத்திற்கு அனுமதி கொடுத்தார் ஆளுநர். ஆறு மாதமாக எதற்காக அவசர சட்டம் தொடர்பாக அரசாணை வெளியிடவில்லை. ஆறு மாதத்தில் ஆன்லைன் ரம்மி, கேமிங் போன்றவை தடுக்கப்பட்டதா? துணை ராணுவ படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திற்கு தமிழக அரசு பாதுகாப்பு அளித்தது பாராட்ட வேண்டியது. அதே நேரத்தில் குருமூர்த்திக்கு அச்சுறுத்தல் தந்தவர்களையும் கைது செய்ய வேண்டும். தற்போதுள்ள முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, சட்டசபையில் சட்டையை கிழித்து வெளியே வந்த போது முதலில் ஆளுநரை தான் ஸ்டாலின் சந்தித்தார்'' என்று கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், “பிரதமர் பங்கேற்ற நேரு உள்விளையாட்டாரங்கில் மெட்டல் டிடெக்டர் எதுவும் வேலை செய்யவில்லை. பிரதமர் வந்து சென்ற பிறகு மத்திய அரசின் முகமை மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் 'மெட்டல் டிடெக்டர்' வேலை செய்யவில்லை என்பதை மாநில அரசுக்கு தெரிவித்துள்ளனர். பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் சாதாரண மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கொடுக்க முடியும்? கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் சரியாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com