“ஒரு முதல்வருக்கு இது அழகா? யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசமான வார்த்தைகள்?”- அண்ணாமலை அறிக்கை

“தொட்டுப்பார் சீண்டிப்பார் என்றெல்லாம் கூறுவது ஒரு முதலமைச்சருக்கு அழகா...? குளித்தலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நீங்கள் குற்றம் சாட்டிய, நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது”- அண்ணாமலை
Annamalai
AnnamalaiPT

நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோவொன்றை வெளியிட்டு பாஜக மற்றும் அதிமுக-வினர் மீது தனது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பேசியிருந்த முதல்வர், அதுகுறித்து அதிமுக மற்றும் பாஜக அரசை விமர்சித்திருந்தார். அச்செய்தியை முழுமையாக இங்கு அறியலாம்:

Annamalai
“எங்களை சீண்டாதீங்க, தாங்கமாட்டீங்க! இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை!”- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

முதல்வரின் வீடியோவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று அறிக்கை வழியாக பதிலளித்துள்ளார். இதுபற்றிய தனது அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டிருப்பவை, இங்கே:

“தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வதற்காக, ஒரு சாதாரண மேடைப் பேச்சாளர் பேசும் தொனி. ஆனால், ஸ்டாலின் அவர்களே... நீங்கள் இப்படிப் பேசுவது, நீங்கள் வகிக்கும் முதலமைச்சர் என்ற பதவிக்கு உகந்ததா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

Annamalai
Annamalaipt desk

1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக, பல முறை எதிர்க்கட்சி வரிசையிலும், சில முறை ஆளுங்கட்சியாகவும் சட்டமன்றத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. சட்ட திட்டங்கள், விசாரணை நடைமுறைகள் அனைத்தும் தெரிந்த, ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் சட்டமன்ற அனுபவமிக்க நீங்கள், ஐந்து கட்சி மாறி வந்த ஒருவரைக் காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்டப் பேச்சாளர் போல பேசுவது முறையா?

தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நடந்த போது கூட வாய் திறக்காத நீங்கள், கரூரில் கடந்த 26/05/2023 அன்று சோதனைக்கு வந்த வருமான வரித துறை அதிகாரிகள் தாக்கப்பட்டபோது, கண்டனம் கூடத் தெரிவிக்காத நீங்கள், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்காக இப்படிப் பொங்குவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா?

உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். கடந்த 2016 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 18 ஆம் நாள், குளித்தலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நீங்கள் குற்றம் சாட்டிய, நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏழு வருடங்களில் என்ன மாறி விட்டது? நீங்கள் கோரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதை உங்கள் கட்சி சார்பாக வரவேற்றல்லவா இருக்க வேண்டும்?

சிபிஐ விசாரணைக்கு முன் மாநில அரசின் அனுமதி வேண்டும் என்று அவசர அவசரமாக முடிவெடுத்துள்ளீர்கள்.

மார்ச் 2019 - பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரிக்கை

ஜூன் 2019 - அதிமுக எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ விசாரணை கோரிக்கை

செப்டம்பர் 2019 ஆர்கே நகர் தேர்தல் முறைகேடுகள் குறித்த விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை

அக்டோபர் 2019 - நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து சிபிஐ விசாரணைக்குக் கோரிக்கை

ஜூன் 2020 தூத்துக்குடி லாக்கப் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கேட்போம் என்ற அறிவிப்பு

செப்டம்பர் 2020 - பிரதமரின், விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில், தமிழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரிக்கை.

நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எத்தனை சிபிஐ விசாரணை கோரிக்கைகள்?

நீங்கள் இப்போது ஆளும் கட்சி ஆன பின்பு சிபிஐ உங்கள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே வரவேண்டும் என்று சொல்வது நீங்கள் நடத்தி வரும் ஆட்சியின் அவலங்களின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

அது மட்டுமல்ல, உங்கள் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த போது, உங்களுக்கான தனிப்பட்ட தமிழக காவல்துறையின் பாதுகாப்பை நம்பாமல், மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பைக் கேட்ட வரலாறுகளும் உண்டு. தற்போது என்ன மாறிவிட்டது என்று நினைக்கிறீர்கள்? யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசமான வார்த்தைகள்? உங்கள் கட்சித் தொண்டர்களை எவ்வாறு வழி நடத்துகிறீர்கள்? இது போன்று பேசுவது, தனிச்சிறப்பு வாய்ந்த, பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட நமது மாநிலத்துக்கு உகந்தது கிடையாது” என்றுள்ளார்.

இத்துடன் பல்வேறு கருத்துகளையும் தன் அறிக்கையில் பகிர்ந்துள்ளார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com