
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தனது லண்டன் பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதையடுத்து அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “பா.ஜ.க. சார்பாக இங்கிலாந்துக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றேன். பிரிட்டன் பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுடன் உரையாற்றினேன். இலங்கை பிரச்னை, வடகிழக்கு பிரச்னை போன்றவற்றில் இந்தியா எடுத்திருக்கக்கூடிய முடிவுகளுக்கு இங்கிலாந்து தமிழர்கள் பாராட்டுகிறார்கள். வடகிழக்குப்பகுதியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரதமர் செய்த பணிகள் குறித்து இங்கிலாந்தில் உள்ள இலங்கை தமிழர்கள் பாராட்டுகிறார்கள். இங்கிலாந்தில் இருக்கக்கூடிய நம் மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளார்கள்.
எனது நடைபயணத்தை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வர உள்ளார். அவரது தேதிக்கு காத்திருக்கோம். இன்னும் இரண்டு நாட்களில் தேதி பற்றி தகவல் வரும். ஜூலை இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் நடை பயணம் தொடங்க உள்ளோம். ஜூலை முதல் வாரத்தில் தி.மு.க. கோப்புகள்-2 வெளியிடப்படும்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருக்க கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. அறநிலையத்துறை அதிகாரி சிதம்பரம் நடராஜர் கோவில் செல்வதற்கு உரிமை உள்ளது. திமுக அரசு முன்னுக்குப் பின் முரணாக சிதம்பரம் கோயில் விவகாரத்தில் செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்களை வைத்து ஒவ்வொரு புதிய பிரச்னையை தி.மு.க. அரசு உருவாக்குகிறது” என்றார்.
இதில் நடைப்பயணத்தை தொடங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா வர உள்ள நிலையில் அவர் வரும் தேதி இன்னும் உறுதியாகவில்லை என்பதால் நடைபயணம் தேதி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கிடையே, ‘தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரை நீங்கள் லண்டனில் சந்தித்தீர்களா?’ என்று நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட அந்த காணொளியை, இங்கே காணலாம்: