
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக-வின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சந்தித்தனர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழக ஆளுநரிடம் இரண்டு விஷயங்கள் தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளோம். ஒன்று, தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 நபர்கள் உயிரிழந்துள்ளதை சுட்டிகாட்டி தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது எப்படி பாலாறு தேன் ஆறு போல ஓடுகிறது என்பது குறித்து தெளிவாக தெரிவித்து உள்ளோம். வெறும் குற்றச்சாட்டுகளை மட்டும் கூறாமல் டாஸ்மாக் வருமானத்தை குறைத்து எப்படி அதே வருமானத்தை அரசு ஈட்ட முடியும் என்கின்ற வெள்ளை அறிக்கையை 15 நாட்களில் பாஜக தாக்கல் செய்யும் என்றும் ஆளுநரிடம் கூறியுள்ளோம்.
மற்றொன்று அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றியது. அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழலில் ஈடுபட்டார் என்ற வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இரண்டு மாதங்களில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்றால் சிறப்பு குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர். இதன்மூலம் அமைச்சர் பதவி பிரமாணம் செய்தபோது கூறிய வார்த்தைகளை செந்தில் பாலாஜி மீறியுள்ளார். ஆகவே அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய முதல்வரிடம் ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க முடியாத சூழல் உள்ளதால் அவரை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
அமைச்சரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய அல்லது விசாரணை முடியும் வரை விடுவிக்க வேண்டும் என முதல்வரிடம் கூற ஆளுநருக்கு உரிமை உள்ளது. அதேபோல கள்ளச்சாராயம் விவகாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்” எனக் கூறினார்.