
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு உறுப்பினர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்களான டி.ஜெயக்குமார் எஸ்.பி.வேலுமணி, செம்மலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும், செயற்குழுக் கூட்டத்தில் 15 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோன்று கர்நாடக சட்டசபை தேர்தல் மற்றும் அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உயர் ரக கார் ஒன்றை வழங்கினார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ”எடப்பாடி பழனிசாமி கழக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சிறப்பான முறையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
செயற்குழுக் கூட்டத்தில் முத்தான 15 தீர்மானங்கள் ஒருமனதோடு நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 20ஆம் தேதி, மதுரையில் இந்திய கண்டத்திலேயே எந்தக் கட்சியும் நடத்திடாத அளவிற்கான எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடைபெறும்.
நான் ஐம்பது வருடங்கள் அரசியலில் பயணித்துள்ளேன். வெறும் இரண்டு வருடங்கள் அரசியல் ஞானத்தைக் கொண்டிருக்கும் அண்ணாமலையை, அரசியலில் ஒரு கத்துக்குட்டி என அழைக்கலாம். அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்கள் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல எனக்குத் தேவையில்லை. தமிழ்நாட்டில் குடும்ப ஆதிக்கம் செய்து, தமிழ்நாட்டை ஊழலில் மூழ்கவைத்து ஊழல் அரசியல் செய்யும் திமுக மீது குற்றம்சாட்டுங்கள்.
எங்கள் மீது ஏன் பாய்கிறீர்கள் (அண்ணாமலையை குறிப்பிட்டு)? அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் யாரைப் பார்த்தும் பயப்படத் தேவையில்லை. மதுரையைக் காத்த சுந்தரபாண்டியன்போல் நடக்கவிருக்கும் மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் நிலை கண்டிப்பாக வரும்” எனத் தெரிவித்தார்.