‘அன்று வால்மார்ட்டை எதிர்த்தவர்கள்; இன்று லூலூ விஷயத்தில் அமைதிகாக்கிறார்கள்’ - அண்ணாமலை

‘அன்று வால்மார்ட்டை எதிர்த்தவர்கள்; இன்று லூலூ விஷயத்தில் அமைதிகாக்கிறார்கள்’ - அண்ணாமலை

‘அன்று வால்மார்ட்டை எதிர்த்தவர்கள்; இன்று லூலூ விஷயத்தில் அமைதிகாக்கிறார்கள்’ - அண்ணாமலை
Published on

'கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்த யாரும் தமிழக ஆளுநரின் கருத்தை மறுக்க மாட்டார்கள்' எனக் கூறியுள்ளார் அண்ணாமலை.  

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வருகை தந்தார்‌. சாமி தரிசனம் செய்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

''கடந்த அதிமுக ஆட்சியில் வால்மார்ட் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய கட்சிகள் அனைத்தும், தற்போது லூலு நிறுவன விஷயத்தில் அமைதியாக இருந்தாலும், தமிழகத்தில் லூலு மால் தொடர்பாக ஒரு செங்கல்லைக்  கூட வைக்க பாஜக அனுமதிக்காது. சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகளை பாதிக்கும் வகையில் அமையும் லூலூ மார்க்கெட் நிறுவனத்தை வரவிடமாட்டோம். இந்த நிறுவனத்தால் நமது சாலையோரத்தில் மளிகைக்கடை வைத்துள்ள அண்ணாச்சி, பூக்கடை வைத்துள்ள அக்கா, சிறுவியாபாரம் செய்யும் அண்ணன் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுவர். எனவே பாஜக அனுமதிக்காது.

தமிழக ஆளுநர் சாதாரண மனிதர் கிடையாது. அவர் உளவுத்துறையில் 35 ஆண்டுகள் பணியில் இருந்த அனுபவம் உள்ளவர். நாகாலந்தில் கவர்னராக இருந்த அவர் கூறும் கருத்து எதுவும் தவறாக இருக்காது‌. குறிப்பாக கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்த  யாரும் ஆளுநரின் கருத்தை மறுக்க மாட்டார்கள்.

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் தங்கள் இருப்பை காண்பிக்க வேண்டும் என்பதற்காக தினமும் ஆளுநரை வசை பாடுகின்றனர். இதன் மூலம் திமுக தலைமைக்கு தங்களது விசுவாசத்தை காட்டிக்கொள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் முயற்சி செய்கின்றனர்.

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை என்பது சட்டமன்றத்திற்குள் சாதனையாகவும், சட்டமன்றத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு சோதனையாகவும் உள்ளது. திமுக அரசு முடிந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தை மகாபலிபுரத்திற்கு மாற்றுவதற்கான வேலைகளை திமுக அரசு ஆரம்பித்துள்ளது. இதற்காக ஆறாயிரம் ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டு சட்டமன்ற பணிகள் துவங்க அரசாணை போடப்பட்டுள்ளது. எனவே புதிய சட்டமன்றம் குறித்த அறிவிப்பு எந்நேரமும் வரலாம்'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: மதுரை: ஆதீனத்திற்கு ஆதரவாக பாஜக பெண் கவுன்சிலர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com