காதுகேட்கும் கருவி விலை சர்ச்சை: `இதையெல்லாம் செய்து ரசீது வழங்குவோம்’- அண்ணாமலை ட்வீட்!

காதுகேட்கும் கருவி விலை சர்ச்சை: `இதையெல்லாம் செய்து ரசீது வழங்குவோம்’- அண்ணாமலை ட்வீட்!
காதுகேட்கும் கருவி விலை சர்ச்சை: `இதையெல்லாம் செய்து ரசீது வழங்குவோம்’- அண்ணாமலை ட்வீட்!

கோவையில் பாஜகவினர் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட காது கேட்கும் இயந்திரத்தின் விலை தொடர்பாக எழுந்த சர்ச்சை விவகாரத்திற்கு பின், “நாங்கள் தீர விசாரித்ததில், அக்கருவிகளின் விலை ரூ.10,000 அல்ல ரூ.350 தான் என தெரியவந்துள்ளது” என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தற்போது மீண்டுமொரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நலத்திட்ட உதவியில் காது கேட்கும் கருவிக்கு அண்ணாமலை கூறிய விலைக்கும், அமேசான் தளத்தில் காட்டும் விலைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் அண்ணாமலை அதை ஒப்புக் கொண்டுள்ளார்.

நேற்று முன்தினம் கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நலத்திட்ட நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சுமார் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அக்கட்சி தொண்டர்கள், பயனாளிகள் என மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அண்ணாமலை, “காது கேளாதோருக்கு 10,000 ரூபாய்க்கு மேல் மதிப்புடைய காது கேட்கும் மெஷின் வழங்கப்பட்டுள்ளது” என்றார். இந்த நிலையில் இந்த காது கேட்கும் மெஷினின் மதிப்பு அமேசான் விலையில் 345 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தகவல் வெளியாகிது. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளம்பிய நிலையில், அண்ணாமலை காது கேட்கும் மெஷின் தொடர்பாக தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரிட்ட பதிவில், “சுந்தராபுரத்தில் 100 நபர்களுக்கு செயற்கை கால், காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்துடன் இணைந்து பாஜக வழங்கியது. அரிமா சங்கத்தின் சார்பாக, தேசிய இயக்குனர் மதனகோபால் அவர்களும் மாவட்ட ஆளுநர் ராம்குமார் அவர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். செயற்கை கால்களை பாஜக கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியது. காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்தினர் வழங்கினர். அரிமா சங்கம் காது கேட்கும் கருவி 10000 ரூபாய் மதிப்பிலானது என்று அதன் இயக்குனர் தெரிவித்ததன் அடிப்படையில் தான் பொருளின் விலை மேடையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊடகங்களில் இன்று, 350 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவியை 10,000 ரூபாய் கருவி என்று தெரிவித்ததாக வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் நாம் விசாரித்ததில், கொடுக்கப்பட்ட காது கேட்கும் கருவிகள் 350 ரூபாய் தான் என்ற உண்மை தெரியவந்தது.

அடுத்த 72 மணி நேரத்திற்குள், 16 குழந்தைகள் உட்பட நேற்று காது கேட்கும் கருவிகளை பெற்றவர் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை பாஜக வழங்கும். அது மட்டுமல்ல, 16 குழந்தைகளின் பெயரில் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கப்பட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் 5000 ரூபாய் முதலீடாக பாஜக செய்யும்.

இன்று 4 குழந்தைகளின் பெயரில் செல்வமகள்/PPF கணக்குகள் தொடங்கப்பட்டு அவரவர் பெற்றோர்களின் கையில் ரசீதுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள 12 குழந்தைகளுக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் கணக்குகள் துவங்கப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலையின் அந்த ட்விட்டர் பதிவு:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com