சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும்முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
டெல்லி சென்றுள்ள அண்ணாமலை தமிழகம் திரும்பிவிட்டார். அவர் தலைமையில்தான் கூட்டம் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் அண்ணாமலை இல்லாமலேயே கூட்டம் தொடங்கப்பட்டது பேசு பொருளானது.
இருப்பினும் ‘அண்ணாமலை வருவதற்கு காலதாமதம் ஏற்படும்’ என அறிவிக்கப்பட்டது. அண்ணாமலை சரியாக 11.30 மணியளவில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருவார் என தெரிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் காலை 10 மணிக்கு முன்பாகவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துவிட்டதால் கூட்டம் அண்ணாமலை வருவதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது தொடர்பாகவும், பாஜக தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மதியம் 1.30 மணி வரை இந்த கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், “தமிழகத்தில் பாஜக பலமுறை தனித்துப் போட்டியிட்டுள்ளது. தனித்து களமிறங்குவது பாஜகவிற்கு புதிதல்ல. நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மாவட்ட தலைவர்களை டெல்லி தலைமை கண்காணித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏறத்தாழ காலை 11.50 மணியளவில் அண்ணாமலை வந்தடைந்தார். தொண்டர்கள் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சிலர், ‘அதிமுக-வுடன் கூட்டணி வேண்டாம்’ என கோஷமும் எழுப்பினர். இன்றைய கூட்டத்தில் அண்ணாமலை என்ன பேசப்போகிறார் என்பது பாஜக நிர்வாகிகள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.