“பழைய அரசியல்; வேட்டி, போர்வை கொடுப்பது நன்றாகவா இருக்கிறது; மாற்று என்ன?” அண்ணாமலை கேள்வி

சென்னையில் மழைக்காலங்களில் அரசியல்வாதிகள் வேட்டியை மடித்துக்கட்டி களத்தில் இறங்குவது நன்றாகவா இருக்கிறது என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, மழைநீர் தேங்காத வகையில் மாற்று யோசனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை
அண்ணாமலைpt web

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வேதாரண்யத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி வரை தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்த அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரார்த்தனை செய்த அண்ணாமலை அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கனமழை மழை மற்றும் புயல் அறிவிப்பு காரணமாக வருகின்ற 5 ஆம் தேதி வரை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6 ஆம் தேதியில் இருந்து நடைபயணத்தை கடலூரில் இருந்து துவங்க உள்ளேன்.

சென்னை மழையில் கீழ்நிலை ஊழியர்கள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை கடுமையாக உழைக்கின்றனர். இரவு நேரத்தில் பிரச்னை என்றாலும் மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் பணியாற்றுகின்றனர். வருடா வருடம் கனமழைக்கு தண்ணீர் தேங்கும் நிலை ஏன் என தமிழக மக்கள் கேட்க வேண்டும். கிட்டத்தட்ட நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளோம். மழை வெள்ள பாதிப்பால் தனியார் கம்பெனிகள் சென்னைக்கு வர யோசித்து ஹைதராபாத் செல்கின்றனர். மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதை நான் அரசியல் செய்ய விரும்பவில்லை.

திமுக கடந்த 30 மாத காலமாக ஆட்சியில் இருக்கிறது. அதற்குள் மழைநீர் தேங்கும் பிரச்னையை முழுவதுமாக சரி செய்ய மாற்றி யோசிக்க வேண்டும். திரும்ப திரும்ப அதேமாதிரி பழைய அரசியல், பழைய பஞ்சாயத்து செய்து மழை வெள்ள காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல்வாதிகள் வேட்டி போர்வை கொடுப்பது நன்றாகவா இருக்கிறது?

வல்லுநர்களை அழைத்துவந்து தீர்வை கண்டுபிடித்து, ஊழல் இல்லாத திட்டங்களை சென்னை மக்களுக்காக செய்ய வேண்டும். மேயர் காரை எடுத்துக்கொண்டு அதிகாலை 3, 4 மணிக்கு செல்வது பெருமை கிடையாது. எந்த ஒரு இடத்திலாவது இப்படி பார்க்கிறோமா? ஒவ்வொரு மழையிலும் சென்னை நகரம் தத்தளிப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com