அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது வரவேற்கத்தக்கது - துணை வேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது வரவேற்கத்தக்கது - துணை வேந்தர் சூரப்பா
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது வரவேற்கத்தக்கது - துணை வேந்தர் சூரப்பா

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது வரவேற்கத்தக்கது என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. ஆனால் இந்த சிறப்பு அந்தஸ்தால் பல்கலைக்கழக இடஒதுக்கீட்டுக்கு பிரச்னை ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் உடனடியாக ஒப்புதல் வழங்காத தமிழக அரசு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. அதில், ‘இடஒதுக்கீட்டு கொள்கையில் எந்த பிரச்னையும் இருக்காது என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. சிறப்பு அந்தஸ்து பெறுவதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டதாக உயர்கல்வி துறை செயலாளர் அறிவித்தார்.

அதன்படி, அண்ணா புகழ்பெற்ற நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் என்று இரண்டாக பிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்குழு அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து முடிவு செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, கொல்லைப் புறம் வழியாகவே மத்திய அரசிடம் பல்கலைக்கழகத்தை ஒப்படைக்கவும், அண்ணா பெயரை அகற்றவும்தான் அமைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது வரவேற்கத்தக்கது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்தால் நிர்வாக ரீதியாகவும், இணைப்பு கல்லூரிகளை கண்காணிக்கவும் வசதியாக இருக்கும்.

பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு முன் கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் உட்பட அனைவரின் கருத்தையும் கேட்டு பிரிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்த பின்பு ஏற்படும் நிதி நெருக்கடிகளுக்கு தமிழக அரசு உதவும் என்று நம்புகிறேன். இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com