'10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட்' - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
அண்ணா பல்கலைக்கழக தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து மார்ச் 12ஆம் தேதி வரை, ஆன்லைனில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் நடைபெற்றன. ஆன்லைன் தேர்வில் விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10ஆயிரம் மாணவர்கள் மீது அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு, ஆப்சென்ட் போடப்பட்டதால் அவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடைத்தாள்களை அனுப்பி வைக்காததால், அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்ட நிலையில் அடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.