விடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் - அண்ணா பல்கலை அறிவிப்பு

விடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் - அண்ணா பல்கலை அறிவிப்பு
விடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் - அண்ணா பல்கலை அறிவிப்பு

முறைகேடுகளை முற்றிலும் தடுக்க பொறியியல் மாணவர்களின் விடைத்தாள்களை‌ ஆன்லைன் மூலமாகத் திருத்தும் நடைமுறையை கொண்டு வர அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பெங்களூருவைச் சேர்ந்த ஐஐஎஸ்சி முன்னாள் பேராசிரியர் சூரப்பாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்தார். இதனையடுத்து அவர் அரியர் தேர்வில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைமுறையில் இருந்த விதிகளை மாற்றி, முதல் பருவத்தில் தோல்வியடைந்த பாடத்தை மீண்டும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும் முதல் பருவத்தில் மட்டுமே எழுத முடியும். மேலும் ஒரு பருவத்தில் 36 புள்ளிகளுக்கு மிகாமல் பாடங்களைத் தேர்வு செய்து எழுது வேண்டும் போன்ற விதிகளை கொண்டுவந்தார்.

ஆனால் இந்த விதிமுறைகளை தகர்க்க வலியுறுத்தி அண்ணா ப‌ல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி கோரிக்கை விடுத்தனர். பின்னர் அரியர் தேர்வுகளை அடுத்த செமஸ்டரிலேயே எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.மேலும் முதல் செமஸ்டரில் அனைத்து பாடங்களிலும் வெற்றி பெறாமல்,5-ஆவது செமஸ்டரை எழுத முடியாது எனவும், கல்வியாண்டின் இறுதி கட்ட செமஸ்டர்களில் தோல்வியடையும் மாணவர்கள், அடுத்தடுத்து வரும் 3 செமஸ்டர்களில் மட்டுமே எழுதிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரியர் முறையைப் போன்றே, தேர்வு விடைத்தாளை மதிப்பீடு செய்யும் முறையிலும் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆய்வு மேற்கொள்ள ஆசிரியர்கள் அடங்கிய குழு ஒன்றை கர்நாடக மாநிலம் பெல்காமில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள், ஸ்கேன் செய்யப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடைத்தாள்களை கணினியிலேயே ஆசிரியர்கள் திருத்தி அதற்கு மதிப்பெண்கள் போடும் நடைமுறையையும் மேற்கொள்ள முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால், முறைகேடுகளை முற்றிலுமாகத் தடுக்க முடியும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். இந்தப் புதிய விதிமுறைகள், பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதலுக்குப்பின்  செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com