அண்ணாவின் பிறந்த நாள்: 128 காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 128 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகளுக்கு
அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
திமுகவின் முதல் முதலமைச்சரான அறிஞர் அண்ணாவின் பிறந்த தினம், நாளை அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அண்ணாவின்
பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா பதக்கங்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறையில் 100 அதிகாரிகளுக்கும், தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை உள்ளிட்ட
பிரிவுகளில் 28 பேர் என மொத்தம் 128 பேருக்கு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதக்கம் பெறும் அலுவலர்களுக்கு அவர்களின் பதவிக்கேற்ப மானியத்தொகையும், வெண்கல பதக்கமும் வழங்கப்படும்
என்றும், திருநெல்வேலி, கங்கைகொண்டான் காவல்நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமலை நம்பிக்கு வீர தீர
செயலுக்கான பதக்கமும், ரூ.5 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.