அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும்: மரத்தில் ஏறி மாணவர் போராட்டம்
அனிதா மரணத்திற்கு நீதி கோரி மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்க அளிக்க வேண்டும் எனவும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னம் வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி மாணவர் ஒருவர் போராட்டம் நடத்தினார். அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக அந்த மாணவர் முழக்கம் எழுப்பினார். மாணவர் மரத்திலிருந்து கீழே இறங்க மறுத்ததால் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், அவரை கீழே இறங்கச்செய்து கைது செய்தனர்.
இதனிடையே, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ராயப்பேட்டையிலுள்ள நியூ காலேஜ் கல்லூரி மாணவர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி அமைதி வழியில் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், தரமணியிலுள்ள சட்டப்பல்கலைக்கழக மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் சாந்தோமிலுள்ள மான்ஃபோர்ட் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் பாலம் அருகே மனித சங்கிலியாக நின்று நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறையினர் அனுமதி கொடுக்காத நிலையிலும் அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.