அனிதா மரணம்: பிக்பாஸ் படப்பிடிப்பை நிறுத்தினார் கமல்?
அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை நடிகர் கமல் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் தோன்றுவார். கமல்ஹாசனின் பேச்சைக் கேட்டு ரசிக்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தனியாக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தற்கொலை குறித்து அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கேரளாவில் நேற்று பேசிய கமல்ஹாசன் ’கனவோடு வாழ்ந்த அனிதாவை மண்ணோடு புதைத்து விட்டனர். கனவுடன் வாழ்ந்த மாணவியை கண்மூட வைத்து, நல்ல மருத்துவரை இழந்து விட்டோம். இந்த விஷயத்தில் கோபப்படுவதற்கு அக்ஷராவோ, ஸ்ருதியோ மட்டும் எனக்கு மகளாக இருக்க வேண்டியதில்லை. அனிதாவும் எனக்கு மகள்தான்.
அனிதாவின் மரணத்திற்காக வெகுண்டெழுந்து போராட வாருங்கள்’என அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் அனிதாவின் கிராமத்திற்கு சென்று அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதே போல் கமல்ஹாசனும் அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல உள்ளதாகவும், இதனால் அவர் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சனி ஞாயிறு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.