தமிழகத்துக்கு எதிராக விலங்குகள் நலவாரியம் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம்
தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஜி.ஜெயசிம்கா கடிதம் எழுதியிருக்கிறார். அதில், உச்சநீதிமன்றத்தால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், தமிழக முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று வெளிப்படையாகவே தெரிவித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருவதாகவும், விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. இது அரசமைப்பு சட்டத்திற்கு இழைக்கப்படும் அவமரியாதை என்றும், இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் விலங்குகள் நல வாரியம் கூறியுள்ளது. இதேபோல் தடை செய்யப்பட்டிருக்கும் சேவல் சண்டை போட்டியை ஆந்திராவில், எம்.எல்.ஏ.க்கள் கோணுகுண்டல சூர்யநாராயணா மற்றும் ரகு ராமகிருஷ்ணன் ராஜ ஆகியோர் தொடங்கி வைத்து, போட்டியை நடத்த ஊக்கமளித்துள்ளனர் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளில் தலையிட்டு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்திற்கு எதிரான அலட்சியம் தொடர்ந்தால், அரசியல் அமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவை பயன்படுத்தி, குடியரசுத்தலைவர் ஆட்சியை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என, விலங்குகள் நல வாரியம், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கேட்டுக் கொண்டுள்ளது.