நெல்லையில் பெரும்பாலான பட்டியலின இளம்பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிப்பு - ஆய்வில் தகவல்

நெல்லையில் பெரும்பாலான பட்டியலின இளம்பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிப்பு - ஆய்வில் தகவல்

நெல்லையில் பெரும்பாலான பட்டியலின இளம்பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிப்பு - ஆய்வில் தகவல்
Published on

நெல்லை மாவட்டத்தில் கிராமப்புறப் பகுதிகளில் பள்ளியில் படிக்கும் பட்டியல் இனத்தை சேர்ந்த இளம்பெண்கள் 71 சதவீதம் பேர் கடுமையான ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கல்வி மற்றும் காப்புகளத்தினர் எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து, நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மனித உரிமை கல்வி மற்றும் காப்புக்களம் பேராசிரியர் மணிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , “நெல்லை மாவட்டத்தில் இயங்கி வரும் மனித உரிமை கல்வி மற்றும் காப்புகளம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கிராமப்புறப் பகுதிகளில் பள்ளிகளில் படிக்கும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. 

நெல்லை மாவட்டத்தில் உள்ள 13 பஞ்சாயத்து யூனியன்களில் 13 முதல் 18 வயதுடைய 82  இளம் பெண்களின் ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பால்ராஜ், நிரஞ்சனா ஆகியோர் தலைமையில் எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், 99 சதவீதம் பேர் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளதும், 71 சதவீதம் பேர் கடுமையான ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.  

அதுபோல், 98 சதவீதம் பேர் வயதுக்கு ஏற்ற எடையில்லாமலும், 89 சதவீதம் பேர் வயதுக்கு ஏற்ற உயரமில்லாமலும், 71 சதவீதம் பேருக்கு ரத்தபோக்கு  இருப்பதும், 60 சதவீதம் பேர் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதும், 71 சதவீதம் பேர் கை, கால் உளைச்சல், சோர்வினால் பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில்  தெரியவந்துள்ளது.  

இந்த ஆய்வு எடுக்கப்பட்ட 72 சதவீதம் வளர் இளம் பெண்கள் படிக்கும் பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை இல்லை என்பதும், 82 சதவீதம் பேர்  படிக்கும் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாததால் வளர் இளம் பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகுகிறார்கள். இளம் பெண்களின மேம்பாட்டுக்கு ராஜீவ்காந்தி திட்டம்(சபேலா) சென்னை, கடலூர், திருச்சி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், கோவை, மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com