அத்தி வரதரை தரிசிக்க வந்த இளைஞர் போலீஸ் தாக்கி மரணம் ?
காஞ்சிபுரம் கோயிலில் அத்தி வரதரை தரிசிக்க வந்த ஆந்திர இளைஞர், பெண் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்குப் பின்னர் அத்தி வரதர் சிலை குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தி வரதரை தரிசிக்க பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்கின்றனர். இதனால் அந்த இடம் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.
இந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்க வந்த ஆந்திர இளைஞர் உயிரிழந்துள்ளார். சக்தி ஆகாஷ் என்ற அந்த இளைஞர் பெண் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காஞ்சி வரதராஜர் கோயிலில் உள்ள தங்கப்பல்லியை செல்போனில் படம் பிடித்தபோது, பெண் காவலர் தாக்கியதாக இளைஞரின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்
முன்னதாக இன்று, அத்தி வரதர் வைபவம் நடைபெறும் இடம் அருகே காவல்துறையினரை கண்டித்து ஷேர் ஆட்டோ ஒருவர் தீக்குளித்தார். குமார் என்ற பெயரைக் கொண்ட அந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோயில் அருகே சென்று வர அனுமதிச்சீட்டு இருந்தும் போலீசார் அனுமதி மறுத்ததாக கூறி அவர் தீக்குளித்துள்ளார்.