“விளையாட்டு தொடர்பாக தமிழக அரசின் எந்த கோரிக்கையையும் செய்து தர தயார்” - ஆந்திர அமைச்சர் ரோஜா உறுதி!

தமிழக அரசு விளையாட்டு தொடர்பாக கோரிக்கை வைத்தால், உதவி செய்வதற்கு ஆந்திர அரசு தயாராக உள்ளது என இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா தெரிவித்தார்.
Minister Roja
Minister Rojapt desk

திருவள்ளூர் அருகே புட்லூர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருகோயிலில் திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் தங்கை மகள் சாருலதாவின் சீமந்தம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆர்.கே.ரோஜா கலந்து கொண்டார். திருக்கோயில் நிர்வாகிகள் அவரை வரவேற்றதை அடுத்து சிறப்பு தரிசனம் செய்தார்.

Roja
Rojapt desk

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆந்திராவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 1 லட்சம் முதல் ரூ 2 லட்சம் வரையில் நேர்முக உதவி கிடைத்துள்ளது. இதனால் அனைத்து தரப்பிலிருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி வருகிறார்.

புத்தூர் அருகே வடமாலைபேட்டை சுங்கச் சாவடியில் நடைபெற்ற சம்பவம் வேதனையளிக்கிறது. அந்தச் சம்பவத்தில் இருதரப்பினரிடையேயும் தவறு உள்ளது. அதை சரி செய்து சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது. அடிக்கடி நடைபெறும் சம்பவங்களை தடுக்கும் வகையில் சுங்கச்சாவடி அருகில் புதிதாக காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சீருடைகளை தயார் செய்ய அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல் ஜவுளி பூங்கா அமைக்கவும் தொடர்ந்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் நெசவாளர்களை பாதிக்காத வகையில் ஆந்திர மாநில அரசு சிறப்பு உத்தரவு வழங்கியுள்ளது. அந்த உத்தரவு, இம்மாத இறுதியில் அமலுக்கு வரும். அப்போது நெசவாளர்கள் மீதான மின்சார கட்டணம் அதிகமின்றி இருக்கும்.

ஆந்திராவில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க கோரிக்கை வைத்துள்ளோம். அதை விரைவாக வழங்கிய முதல்வர் சிறப்பாக செயல்பட்டார்.

Foot ball
Foot ballpt desk

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளது போல், இங்கு நான் அத்துறைகளின் அமைச்சராக உள்ளேன். இரண்டு பேரும் திரைப்படத் துறையில் இருந்து வந்தவர்கள் என்பதோடு, ஒரே துறையில் இப்போது பயணிக்கிறோம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Minister Udayanithi
Minister Udayanithipt desk

தற்போதைய நிலையில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநராக நான் உள்ளதால், விளையாட்டு தொடர்பாக தமிழக அரசு எந்த கோரிக்கை வைத்தாலும் அதற்கு உறுதுணையாக இருந்து செய்து கொடுக்க தயாராகவே உள்ளேன்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com