ஆண்டாள் தனது தாய் போன்றவர் என்றும் அவரை ஒரு போதும் அவமதித்ததில்லை என்றும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
ஆண்டாள் சர்ச்சை குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வைரமுத்து பேட்டி அளித்துள்ளார். ஆண்டாளின் அருந்தமிழை கடந்த 40 ஆண்டுகளாக தான் சுவாசித்து வருவதாகவும் அவரது தமிழை வைணவர்களை விட தான் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் வைரமுத்து கூறியுள்ளார்.
இனிமையான தமிழுக்காக மட்டுமல்லாமல் பெண் விடுதலை கருத்துக்காகவும் ஆண்டாளை கொண்டாடுவதாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்த தனது பேச்சு தற்கால சூழலுடன் பொருத்தி தவறாக பொருள் கொள்ளப்பட்டு விட்டதாகவும் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
ஆராய்ச்சி ஒன்றை மேற்கோள் காட்டி தான் பேசியதாகவும் அதை எல்லாரும் புரிந்துகொண்டு விட முடியாது என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். இதைக்கூறியதற்காக மீண்டும் தன்னை தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.