ராணிப்பேட்டை: பெட்ரோல் ஊற்றி பாமக தொண்டர் கொலை; அன்புமணி ராமதாஸ் கண்டனம்
செய்தியாளர்: ச.குமரவேல்
ராணிப்பேட்டையில் நெமிலி அருகே 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்திருக்கிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சூர்யா (எ) தமிழரசன் (23), விஜயகணபதி (22). இவர்கள் இருவரும் கடந்த 16-ம் தேதி திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நின்றிருந்த போது, திருமால்பூரைச் சேர்ந்த பிரேம்குமார் (24) என்ற இளைஞர் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கு சென்றுள்ளனர்.
இரு தரப்புக்குமிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் கேனுடன் வந்த நபரிடமிருந்து, பிரேம்குமார் கேனை பறித்து அதிலிருந்த பெட்ரோலை தமிழரசன் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். இதில், தமிழரசனை காப்பாற்ற சென்ற விஜயகணபதிக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்து மீட்கப்பட்ட இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரேம்குமார் (24), வெங்கடேசன் (23) ஆகிய இருவரையும் நெமிலி காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்களையும் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழரசன் நேற்று (ஜனவரி 22) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நெமிலி பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தமிழரசன் கொலையை கண்டித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழரசனின் குடும்பத்திற்கு அரசு வேலை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில், கொடியவர்களால் பெட்ரோல் குண்டு வீசி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டன் தம்பி தமிழரசன் மறைந்து விட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழரசனை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளித் தம்பி தமிழரசன் இப்போதுதான் பதின்வயதைக் கடந்து வந்திருந்தார்.
அவரது வாழ்வில் இனி தான் வசந்தங்கள் வீசியிருக்க வேண்டும். அரசியலிலும், சொந்த வாழ்விலும் உயரங்களை நோக்கி இனி தான் அவர் பயணித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு சற்றும் வாய்ப்பளிக்காமல், தமிழரசனை கொடூரமான முறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி, கட்டாயப்படுத்தி தீவைத்து படுகொலை செய்து விட்டனர். நெல்வாய் கிராமத்திற்குள் நுழைந்து கொடியவர்கள் சிலர் செய்த அட்டூழியங்களைத் தட்டிக் கேட்டதைத் தவிர வேறு எந்த பாவததையும் தமிழரசன் செய்யவில்லை.
கஞ்சா போதையில் நெல்வாய் கிராமத்தில் திருமால்பூரைச் சேர்ந்த பிரேம், மணிகண்டன், வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் இரு சக்கர ஊர்தியில் வந்து அட்டகாசம் செய்ததை தமிழரசன், விஜயகணபதி, சங்கர் உள்ளிட்ட இளைஞர்கள் தட்டிக் கேட்டனர்.
அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் தமிழரசனையும், விஜயகணபதியையும் கொடியவர்கள் கூட்டம் பெட்ரோல் குண்டுகளை வீசி படுகொலை செய்ய முயன்றுள்ளது. அந்தக் கொடியத் தாக்குதலில் தமிழரசன் உயிரிழந்து விட்ட நிலையில், இன்னொரு தம்பி விஜயகணபதி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான்.
இந்த சதித்திட்டத்திற்கு பெரும் கூட்டம் எல்லா வகையிலும் உதவி செய்துள்ளது. நெல்வாய் கிராமத்தில் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் இத்தகைய கும்பலால் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. கஞ்சா வணிகர் செய்வதில் தொடங்கி எதிர்ப்பவர்களைக் கொலை செய்வது வரை எல்லாக் குற்றங்களையும் செய்யும் அந்தக் கும்பலுக்கு அரசும், காவல்துறையும் துணை நிற்பதுதான் அவர்களின் துணிச்சலுக்கு காரணமாக உள்ளது.
அத்தகைய கும்பல்களின் அட்டகாசத்துக்கு தமிழக அரசும், காவல்துறையும் முடிவு கட்ட வேண்டும். தமிழரசன் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழரசனின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு முன்வர வேண்டும். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் விஜயகணபதிக்கு தரமான மருத்துவர் அளிப்பதுடன், அவருக்கு ரூ.10 லட்சம் நிதியும், அரசு வேலையும் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.
அன்புமணி செய்தியாளர் சந்திப்பு:
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி, “தமிழரசனின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சமும், அவரின் தம்பிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். நெமிலி மட்டும் இல்லை, ராணிப்பேட்டை மாவட்டமே இன்று பரபரப்பாக இருக்கிறது.
இரண்டு சமுதாயத்தை அடித்துக்கொள்ள சொல்ல வேண்டுமா? பிறகு உன் ஓட்டு என் ஓட்டு என்று வாங்குவதா திராவிட மாடல்?.. இதுவா அரசியல்? தமிழ்நாட்டில் இரண்டு பெரிய சமுதாயம் பாதாளத்தில் இருக்கிறது. அவர்கள் படிக்க வேண்டும் வளரவேண்டும், அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி கிடைக்கும்.
வடதமிழ்நாட்டிலே இதுபோன்ற சம்பவங்கள் வேண்டுமென்று நடைபெற்று கொண்டிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வடதமிழகம் எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியும்.
நாங்கள் எங்கள் தொண்டர்களை 'இது வேண்டாம் இடஒதுக்கீட்டை பயன்படுத்தி கொள்ளுங்கள், படி, முன்னேறு' என்று எவ்வளவோ கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.. ஆனால், ஒரு சில இயக்கங்களின் தலைவர்கள் அத்துமீறு, அடங்கமறு, அடி என்று கூறுகிறார்கள். அவர்களை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். இதுபோன்ற சம்பவங்களுக்கெல்லாம் காரணம் காவல்துறையின் கையாலாகாதத்தனம்தான்” என்று பேசியுள்ளார்.