தனியார் பள்ளிகளுக்கான அங்கீகார விவகாரம்: அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பில் மகேஸ் தப்பிச் செல்லமாட்டார்; சாட்சிகளை கலைக்கமாட்டார் என்றும் எப்போது வேண்டுமானாலும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக தயார் எனவும் அவரது தரப்பு வாதிட்டது.
ஆனால், குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் இது ஒரு நிதி பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட வழக்கு என்றும் 400 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவதாகவும் வாதிடப்பட்டது.
அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் வழங்கினால் எதுவும் வெளிவராது என்றும் அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் எனவும் காவல்துறை தரப்பு வாதம் முன்வைத்தது. மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமாரை அன்பில் மகேஸ்தான் பாதுகாக்கிறார் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

