அதிர்ச்சியூட்டும் நிகழ்கால ‘அயலி’ கிராமம்! தமிழ்நாட்டுல இன்னும் இப்படியொரு பிற்போக்குத்தனமா?

இந்த கிராமத்து பெண்கள் அவர்களது மாதவிடாய் காலங்களில் கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனி அறையில் தான் தங்கியிருக்க வேண்டும்.
பெத்திலுபட்டி, விருதுநகர்
பெத்திலுபட்டி, விருதுநகர்pt desk

உலக நாடுகளில் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றில் தனித்துவம் மிக்க நாடாக விளங்கும் இந்தியாவில் தமிழக கலாசாரம் மற்றும் பண்பாட்டிற்கு தனி சிறப்பு உண்டு. அதேநேரம் ‘பழையது கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப தன்னைத்தானே தமிழர்கள் தகவமைத்துக்கொள்வார்கள். பாரம்பரியமும் கெடாமல் கலாசாரமும் கெடாமல்... புதுமையையும் ஏற்பதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்கள்.

அப்படியே ஒரு நிமிடம். இதுவரை சொன்னதை மறந்துவிடுங்கள். இதற்கு நேரெதிராய் ஒரு கிராமம் உள்ளது. கொஞ்சம் ஆச்சர்யமும், பல அதிர்ச்சியுமாம் ‘அந்த காலத்துல...’ என்று நின்றுவிட்டது அந்த கிராமம்!

விருதுநகர் மாவட்டம் பெத்திலுபட்டி கிராமம்தான் அது.

அப்படி என்னங்க இந்த கிராமத்துல என்கின்றீர்களா? சொல்றோம்.

இந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள் மேலாடை அணிவதில்லை. ஆண்கள் மது அருந்துவதில்லை (இது பாராட்டுதலுக்குரியதே). வெளி இடங்களுக்கு சென்றால் உணவருந்துவதும் இல்லை. இப்படி ஏராளமான கட்டுப்பாடுகளை இன்றளவும் கடைபிடித்து வரும் இந்த கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பெத்திலுபட்டி, விருதுநகர்
பெத்திலுபட்டி, விருதுநகர் pt desk

ஜக்கம்மாள், குஞ்சிலம்மாள், முத்தாலம்மன் ஆகிய தெய்வங்களை குலதெய்வங்களாக வழிபட்டு வரும் இந்த கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயமும், வேட்டையாடுவதும் இருந்து வந்தது. தெய்வ நம்பிக்கைக்கு கட்டுப்பட்ட இவர்கள், பல்வேறு பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றம் நடைமுறைகளை பரம்பரை பரம்பரையாக தற்போது வரை கடைபிடித்து வருகின்றனராம்.

இவர்களது திருமண விழாக்கள் மூன்று நாட்கள் வித்தியாசமாக நடைபெறும். அந்நேரத்தில் பாரம்பரிய முறைப்படி ஊரின் மத்தியில் ஆலமரவேர், பச்சை இலை, தழை ஆகியவற்றைக் கொண்டு குடிசைகள் அமைத்து திருமண சடங்குகளை நடத்துகின்றனர். இந்த சடங்குகளின் போது கிராமிய ஆடல் பாடல், தேவராட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் யாரும் வெளியிடங்களில் உணவு, தண்ணீர் அருந்துவதில்லை. அவ்வாறு அருந்துவது தெய்வ குற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை கொண்டுள்ள இவர்கள், வெளியிடங்களுக்குச் செல்லும்போது உணவு மற்றும் தண்ணீரை தற்போது வரை எடுத்துச் செல்கின்றனர். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியிடங்களில் டீ, வடை போன்ற பதார்த்தங்களை உண்ண நேர்ந்தால் மீண்டும் கிராமத்துக்குள் வரும்போது, அதை கழிப்பதற்கான சடங்கு முறைகளை செய்த பின்பே கிராமத்திற்குள் வருகின்றனர்.

இந்த கிராமத்தின் தலைவராக பூசாரி எத்திலாவுலு நாயக்கர் என்பவர் உள்ளார். இவர் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதை இறுதி முடிவாக ஏற்பார்களாம்.

அதேபோல் இந்த கிராமத்து ஆண்கள் யாரும் மது அருந்துவது கிடையாது. தங்களது குலதெய்வம் அக்னி தேவியாக உருவகப்படுத்தப்படுவதால் இதுபோன்ற தவறுகள் செய்தால் கடுமையான பின் விளைவுகள் ஏற்படும் என்று நம்புகின்றனர்.

அதேபோல் இந்த கிராமத்து பெண்கள் யாரும் மேலாடை அணிவதில்லை. தங்கள் குலதெய்வ வம்சப்படி மேலாடை அணிவது தவறு என்ற கருத்தை கொள்கைப் பிடிப்போடு கடைபிடித்து வருகின்றனர். இந்த கிராமத்து பெண்கள் அவர்களது மாதவிடாய் காலங்களில் கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனி அறையில் தான் தங்கியிருக்க வேண்டும். ஐந்து நாட்களுக்குப்ளுக்குப் பின்னரே தங்கள் வீடுகளுக்கு இப்பெண்கள் மீண்டும் திரும்புகின்றனர்.

பெத்திலுபட்டி, விருதுநகர்
பெத்திலுபட்டி, விருதுநகர் pt desk

இவர்கள் மத்தியில் காதல் என்ற வார்த்தைக்கே இடமில்லை.

இவர்களது இதே பழக்க வழக்கங்கள், பாரம்பரியத்தை கடைபிடித்து வரும் விருதுநகர் மாவட்டத்தின் நிறைமதி, பூசாரி நாயக்கன்பட்டி, காக்கி வாடன் பட்டி, பாறைப்பட்டி, ஜமீன் கள்ளமநாயக்கன்பட்டி, கோதைநாச்சியார் புரம், ஆண்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இவர்களது உறவுமுறைகாரர்களுடன் மட்டுமே பெண் கொடுத்து, பெண் எடுக்கும் வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.

பெத்திலுபட்டி, விருதுநகர்
பெத்திலுபட்டி, விருதுநகர் pt desk

தற்போது விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாததாலும், வேட்டையாட தடை உள்ளதாலும் வாழ்வாதாரத்திற்காக இக்கிராம மக்கள் அருகிலுள்ள பட்டாசு ஆலைகளில் வேலைக்குச் சென்று வருகின்றனர். மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் குலதெய்வ கோவில் விழா மற்றும் திருமணங்களின் போது நடத்தப்படும் பாரிவேட்டைக்கு அரசு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்காமல் அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர் இவர்கள்.

எந்த மக்களாக இருந்தாலும், பழையன கழிதலும் புதியன புகுதலும் நிச்சயம் தேவை என்பதை மட்டுமே, நாம் இவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com