4 தலைமுறைகளாக கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் களைகட்டும் கலைக்குடும்பம் - ஓர் தொகுப்பு!

4 தலைமுறைகளாக கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் களைகட்டும் கலைக்குடும்பம் - ஓர் தொகுப்பு!
4 தலைமுறைகளாக கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் களைகட்டும் கலைக்குடும்பம் - ஓர் தொகுப்பு!

மயிலாடுதுறையில் 4 தலைமுறைகளாக கைவினைப் பொருட்களை கலைக்குடும்பம் ஒன்று உருவாக்கிவருகிறது. குறுந்தொழிலை விரிவுபடுத்தி வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பிவருகின்றனர். இவர்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலமாகவே ஆர்டர்கள் குவிவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறையில் மூன்று தலைமுறைகளாக குடிசைதொழிலாக செய்யப்பட்டு வந்த கொலு பொம்மைகள் உற்பத்தி தொழிலை நான்காம் தலைமுறை பட்டதாரி இளைஞரான ஆனந்தகுமார் விரிவுபடுத்தி அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இவர் தயாரிக்கும் கொலு பொம்மைகள், மண் சிற்பங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இரண்டு தொழிலாளர்களுடன் இணைந்து தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆனந்தகுமாரின் தொழிலின் மூலம் 10க்கும் மேற்பட்டோர் மறைமுக வேலைவாய்ப்பினையும் பெற்று வருகின்றனர். தான் கற்ற கலையை அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக கோடைகால வகுப்புகளையும் நடத்தி வருகிறார் ஆனந்தகுமார்.

அரசின் கடன் உதவி போதுமான அளவில் கிடைப்பதாகக் கூறும் ஆனந்தகுமார், 5 இன்ச் முதல் 5 அடி உயர மண் சிற்பங்களை உருவாக்கி வருகிறார். அவற்றில் 5 இன்ச் மண்சிற்பங்களை ரூ.40க்கும், 5 அடி மண்சிற்பங்களை ரூ.9000 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்து வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோதும், தற்போது கொரோனா தொற்று குறைந்த நிலையிலும் விற்பனையில் எந்த பின்னடைவும் இல்லை என்றும், முன்பெல்லாம் மக்கள் நேரில் வந்து வாங்கிச்சென்றது மாறி, தற்போது, வாட்ஸ்-ஆப்பிலேயே ஆர்டர் கொடுத்து, கொரியர் மூலமாக பெற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கிறார் ஆனந்தகுமார். இந்நிலையில், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை ஆனந்தகுமாரின் கலைக்கூடத்தில் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com