அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பல சர்ச்சைகளுக்குப் பிறகு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கவுள்ளது. ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்கின்றன. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தெற்கு கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பல ஆண்டுகளாக விவசயிகள் சங்கம் நடத்தி வருகிறது என்றும் இது தங்களது பாரம்பரியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது ராமசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் காலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கவுள்ள நிலையில், இன்றே இந்த மனு விசாரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.