2 வாரங்களாக சோர்வுடன் சுற்றிய 11 வயது இளம் ஆண் யானை - கடைசியில் நிகழ்ந்த சோகம்!

2 வாரங்களாக சோர்வுடன் சுற்றிய 11 வயது இளம் ஆண் யானை - கடைசியில் நிகழ்ந்த சோகம்!
2 வாரங்களாக சோர்வுடன் சுற்றிய 11 வயது இளம் ஆண் யானை - கடைசியில் நிகழ்ந்த சோகம்!

சிறுமுகை வனப்பகுதியில் உடல்நலக்குறைவால் இளம் வயது ஆண் காட்டு யானை இறந்து கிடந்தநிலையில், யானையின் உடல் அருகே பிற யானைக்கூட்டங்களின் நடமாட்டத்தால் உடற்கூறு ஆய்வை ஒத்தி வனத்துறை ஒத்திவைத்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியான பெத்திகுட்டை வரப்பள்ளம் என்னுமிடத்தில் இன்று வன பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஆண் யானையொன்று இறந்து கிடப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இது குறித்து வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து வனத்துறை மருத்துவர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

முதற்கட்ட ஆய்வில் இறந்த யானைக்கு பதினோரு வயதிருக்கலாம் என்றும், உடல்நல கோளாறு காரணமாக, கடந்த சில தினங்களாக போதுமான அளவு உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாத நிலையில் யானை இறந்திருக்கலாம் என்றும் இக்குழுவினர் கண்டறிந்தனர். எந்த வகையிலான நோய் பாதிப்பில் யானை இறந்தது என்பதை கண்டறியும் வகையில், அதன் உடலை உடற்கூறு ஆய்வு நடத்த மருத்துவ குழுவினர் முயன்ற போது, யானையின் உடல் அருகே பிற யானைக்கூட்டங்களின் நடமாட்டம் அதிகரிக்க துவங்கியதால், வேறு வழியின்றி வனத்துறை குழுவினர் பின்வாங்கினர்.

பிற்பகல் நேரத்தில் பெத்திக்குட்டை பகுதி முழுவதுமே தண்ணீர் தேடி வரும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதால், உடற்கூறு ஆய்வு நடத்தும் முடிவை கைவிட்ட வனத்துறையினர் அதனை அடுத்த நாளுக்கு ஒத்திவைத்தனர். தற்போது இறந்து கிடக்கும் யானை கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக அதேப் பகுதியில் சோர்வுடன் சுற்றி வந்ததாகவும், இதனையறிந்த வனத்துறையினர், இதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்த போதிலும் அருகே சென்றால் விரட்டி வந்த காரணத்தினால் ஆதீத சோர்வடைந்து யானை படுத்துவிட்டால் உடனடியாக சிகிச்சையளிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு வாய்ப்பளிக்காமல் யானை திடீரென இறந்து விட்டது வனத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பதினோரு வயது மட்டுமே ஆன ஒரு இளம் வயது ஆண் யானை இறப்பது மிகவும் கவலைக்குரியது, கோவை வனக்கோட்டத்தில் எதனால் யானகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ச்சியாக மரணித்து வருகின்றன என்பதை தகுத்த வல்லுநர்கள் குழு மூலம் ஆய்வு நடத்துவது அவசியம் என வனஉயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com