\
Amma Unavagam Staff Clarify Dosa Controversy in Cumbum
அம்மா உணவகம் தோசை சர்ச்சைPt web

"கொரோனா காலத்தில் இருந்தே தோசை சுடுகிறோம்" - கம்பம் அம்மா உணவக ஊழியர்கள் விளக்கம்!

கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட தோசை குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், ஊழியர்கள் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
Published on

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில், சட்டமன்ற உறுப்பினர் ஆய்வுக்கு வந்தபோது வெளியில் இருந்து தோசை வாங்கித் தரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலுக்கு, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் திட்டவட்டமான மறுப்பையும் விளக்கத்தையும் அளித்துள்ளனர். நேற்றைய தினம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, கம்பம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருக்கு அம்மா உணவகத்தின் சார்பில் தோசை வழங்கப்பட்டது. அதனைச் சாப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர், தோசை மிகவும் நன்றாக இருப்பதாகப் பாராட்டிவிட்டுச் சென்றார். இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விவாதம் கிளம்பியது.

அம்மா உணவகம்
அம்மா உணவகம்

"அம்மா உணவகங்களில் எப்போது தோசை வழங்கப்பட்டது? சட்டமன்ற உறுப்பினர் வருகிறார் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, ஊழியர்கள் வெளியிலிருந்த கடையில் தோசையை வாங்கி வந்து அவருக்குக் கொடுத்துள்ளனர்" என்று சில தகவல்கள் பரவின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அம்மா உணவக ஊழியர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "நாங்கள் கடந்த கொரோனா பேரிடர் காலத்தில் இருந்தே மக்களுக்குத் தொடர்ந்து காலையில் தோசை வழங்கி வருகிறோம். எங்கள் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் தோசையை விரும்பி கேட்பதால், அவர்களின் நலனுக்காக இப்போது வரை தோசை தயாரித்து வழங்கி வருகிறோம்.

நேற்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எங்கள் உணவகத்திற்கு ஆய்வுக்கு வந்தது முற்றிலும் தற்செயலான ஒன்று. அவர் வந்தவுடன் சாப்பிட வேண்டும் என்று கூறினார். அந்த நேரத்தில் எங்களிடம் தயாராக இருந்த, நாங்கள் சுட்டு வைத்திருந்த தோசையையே அவருக்குக் கொடுத்தோம். அதைச் சாப்பிட்டுவிட்டு அவரும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டிச் சென்றார். வெளியில் இருந்து வாங்கித் தந்ததாகக் கூறப்படும் தகவல்களில் உண்மை ஏதுமில்லை." என தெரிவித்தனர்.

Amma Unavagam Staff Clarify Dosa Controversy in Cumbum
இந்து அறைநிலையத் துறை விவகாரம் | அமைச்சர் ரமேஷ் Vs முன்னாள் அமைச்சர் சேகர்பாபு.. பேசியது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com