தரம் குறைந்ததா? அம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்..
தரம் குறைந்ததாலும், உணவு தயாரிப்புக்கு உள்ள அளவுக் கட்டுப்பாட்டாலும் அம்மா உணவகங்களுக்கு வரும் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அம்மா உணவக திட்டம், கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்படும் நிலையில், படிப்படியாக பிற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தொடக்கத்தில் கூட்டம் அலைமோதிய இந்த உணவகங்களில், படிப்படியாக மக்கள் வருகை குறைந்துபோனது. இதற்கு காரணம், அரசின் சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை வசமிருந்த அம்மா உணவகங்கள், தற்போது மாநகரட்சியின் சுகாதாரத்துறை வசம் போனதே என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, அம்மா உணவகத்துக்கான உணவு தயாரிப்புக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தரம் குறைவது ஒருபுறமிருக்க, உணவு தயாரிப்புக்கான ஒதுக்கீட்டு அளவும் குறைக்கப்பட்டது. இதனால் உணவருந்த வரும் பலருக்கு உணவு கிடைக்காத நிலை உள்ளது. சென்னையில் தினசரி 4 ஆயிரம் இட்லி விற்ற உணவகம் தற்போது ஆயிரத்து 200 இட்லி மட்டுமே விற்பனை செய்கிறது. இதே போல, மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அம்மா உணவகத்துக்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் வருவதையொட்டி, ஒதுக்கீடுகளை உயர்த்தி வழங்குமாறும் அதில் வேலை செய்யும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகராட்சிகளின் இந்த குளறுபடியால் சென்னையில் பல அம்மா உணவகங்களை மூடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.