தமிழகத்தில் அமித் ஷா... "கூட்டணியை நாங்க பாத்துக்கறோம்" - முதல் நாளில் நடந்தது என்ன?

தமிழகத்தில் அமித் ஷா... "கூட்டணியை நாங்க பாத்துக்கறோம்" - முதல் நாளில் நடந்தது என்ன?
தமிழகத்தில் அமித் ஷா... "கூட்டணியை நாங்க பாத்துக்கறோம்" - முதல் நாளில் நடந்தது என்ன?

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கியத் தலைவருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை பிற்பகல் சென்னை வந்தடைந்தார். முதல் நாளில் நடந்தது என்ன? - லைவ் அப்டேட்ஸின் தொகுப்பு இங்கே...

நவ.21,2020 | இரவு  10.06 மணி: கூட்டணி அமைப்பதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்; நீங்கள் தேர்தல் பணிகளை கவனியுங்கள் என்று சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா கூறினார். மேலும் பூத் கமிட்டியை வலுப்படுத்தவும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தவும் பாஜகவினருக்கு அமித் ஷா அறிவுரை கூறினார். பல மாநிலங்களில் பின் தங்கியிருந்த நிலையில் தற்போது பாஜக ஆளும் மாநிலங்களாக மாற்றி காட்டியுள்ளோம்; மற்ற மாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் பாஜக தொண்டர்கள் உழைக்கவேண்டும்; இப்போது இருந்தே நீங்கள் உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் பாஜக ஆட்சி வரும் என்றும் பேசியுள்ளார். 

நவ.21,2020 | இரவு  8.26 மணி: சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்திவருகிறார். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்துவருகிறது. தமிழக அரசியல் நிலவரம், சட்டப்பேரவை தேர்தல், களப்பணிகள் குறித்தும் அந்த ஆலோசனையில் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி, மாநில தலைவர் எல்.முருகன், இல. கணேசன், பொன். ராதா ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும், குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

நவ.21,2020 | இரவு  7.40 மணி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 3 கடிதங்களை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. அதில்,

  • நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கவேண்டும்; கோதாவரி - காவிரி இணைப்பு, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் தரவும் கோரிக்கை வைத்துள்ளார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கான நிதியை விரைந்து விடுவிக்கவும் முதல்வர் கடிதம்மூலம் கோரிக்கை வைத்துள்ளார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு ரூ. 10,700 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
  • தருமபுரி, விருதுநகர் மாவட்டங்களில் மெகா டெக்ஸ்டைல் பூங்கா அமைக்கவும், மெகா ஜவுளிப் பூங்கா அமைக்க தொழில்நுட்ப நிதியுதவியை அளிக்க அந்தந்த அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சென்னை அருகே மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு பூங்கா அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும், பூங்கா அமைக்க நிதி, தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். 
  • மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்த வேண்டும் எனவும், சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு 50% முதலீட்டை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

நவ.21,2020 | மாலை  6.57 மணி: சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தனர். அதிமுக - திமுக கூட்டணி தொடரும் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவித்திருந்த நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் அது தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார், எம்.பி ரவீந்தரநாத் ஆகியோரும் உள்ளனர். அமித் ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 3 கடிதங்களை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

நவ.21,2020 | மாலை  6.35 மணி: அரசு விழாவில் தொடர்ந்து பேசிய அமித் ஷா, ’’நாடு முழுவதும் விவசாயிகளை கட்டுப்படுத்திவந்த இடைத் தரகர்களை நீக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏழை மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு, கிராமங்களில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்தும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அனைவருக்கும் 2022ஆம் ஆண்டுக்குள் வீட்டு வசதி என்ற திட்டமும் நிறைவேறும் என நம்புகிறேன். விவசாயிகளுக்கு ரூ. 6000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பல கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இதுவரை விவசாய நிதியுதவி திட்டத்தின்கீழ் ரூ. 95,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,400 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. நீலப்புரட்சியில் தமிழகம் விரைவில் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கிறோம்.

2024ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வதே மத்திய அரசின் இலக்காக உள்ளது. பாறை போன்ற இந்த ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் சென்ட்ரல் என பிரதமர் மோடி அரசுதான் பெயரிட்டது. தமிழகத்தில் பாதுகாப்பு வளாகத்தை அமைத்தது பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான்.

திமுக தலைவர்கள் அடிக்கடி மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாக குறை கூறுகிறார்கள். 10 ஆண்டுகள் மத்திய மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக என செய்திருக்கிறது என பட்டியலிடுங்கள். தமிழகத்திற்கு மன்மோகன் சிங் அரசு ரூ. 16,155 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு ரூ. 32,850 கோடி ஒதுக்கீடு செய்தோம். தமிழகத்துக்கு நாங்கள் செய்தவற்றை பட்டியலிடத் தயார்; திமுக விவாதிக்கத் தயாரா? வாரிசு அரசியலை படிப்படியாக பாஜக ஒழித்து வந்துள்ளது, தமிழகத்திலும் அதை செய்வோம்’’ என்று அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

நவ.21,2020 | மாலை  6.10 மணி: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியபிறகு, அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அதில், '’முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி இனியும் தொடரும் நம்பிக்கை உள்ளது. உலகின் தொன்மையான தமிழ்மொழியில் பேச இயலாதது எனக்கு வருத்தமாக உள்ளது. தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியம் மிகவும் தொன்மையானது. முதல்வர், துணை முதல்வர் தலைமையில் தமிழகம் மிகுந்த முன்னேற்றம் கண்டுவருகிறது. ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக இருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் உள்ளது. கொரோனாவை எதிர்த்து அரசு மட்டும் போராடவில்லை, 130 கோடி மக்களும் அரசுகளுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். கொரோனாவில் இருந்து குணமடைவோரின் தேசிய விகிதத்தைவிட தமிழகத்தில் விகிதம் அதிகம். கொரோனா தடுப்பு மட்டுமல்ல, நிர்வாகத் திறனிலும் தமிழகம் இந்த ஆண்டு முதலிடம். தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் அறிவியல்பூர்வமாக துல்லியமான தரவுகளுடன் பேசுகிறார்கள். நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பை யாரும் மறுக்கமுடியாது’’ என்று பேசினார்.

நவ.21,2020 | மாலை  5.45 மணி: துணை முதல்வரை அடுத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நீர் மேலாண்மையை மேம்படுத்த தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிமுக அரசு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. குடிமராமத்து பணிகள் மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்று பேசியுள்ளார்.

மேலும், தமிழகத்தின் முக்கிய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்றும், இந்த அணி அதிக இடங்களில் வெற்றிபெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது உரையின் முடிவில் கூறினார்.

நவ.21,2020 | மாலை  5.30 மணி: உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டிய பிறகு சிறப்புரை ஆற்றிய தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமித் ஷா சிறந்த நிர்வாகி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த நிகழ்வு ஓர் உதாரணம் என்று கூறிய அவர், அதிமுக - பாஜக இடையேயான கூட்டணி சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும் என்றும் பேசியுள்ளார். 

நவ.21,2020 | மாலை  5.23 மணி: வல்லூரில் ரூ. 900 கோடியில் பெட்ரோலிய முனையம், அமுல்லைவாயிலில் ரூ. 1400 கோடியில் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு காமராஜர் துறைமுகத்தில் ரூ. 900 கோடியில் புதிய இறங்குதளம் அமைக்கும் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். 

நவ.21,2020 | மாலை  5.18 மணி: ரூ. 309 கோடியில் சென்னை வர்த்தக மையத்தை விரிவுபடுத்தும் திட்டத்துக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். அதனையடுத்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 3 திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.  

நவ.21,2020 | மாலை  5.10 மணி: கோவை - அவிநாசி சாலையில் ரூ. 1,620 கோடியில் உயர்மட்ட சாலைத் திட்டத்திற்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். கரூர் நஞ்சை புகலூரில் ரூ. 406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்தை தொடங்கி வைத்தார். 

நவ.21,2020 | மாலை 5.05 மணி: முதலில் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்கத்தை அமித் ஷா அர்ப்பணித்தார். ரூ.61,843 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

நவ.21,2020 | பிற்பகல் 4.50 மணி: கலைவாணர் அரங்கத்திற்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். குத்துவிளக்கு ஏற்றிய அமித் ஷாவுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய முதல்வர் பழனிசாமி விநாயகர் சிலையையும், துணை முதல்வர் நடராஜன் சிலையையும் பரிசாகக் கொடுத்தனர். முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் துணைமுதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், வாரியத் தலைவர்கள், அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

நவ.21,2020 | பிற்பகல் 4.35 மணி: சென்னையில் அமித் ஷா - நோக்கம் என்ன? காரசார விவாதம் 

நவ.21,2020 | பிற்பகல் 4.25 மணி: அமித் ஷா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது; மத்திய அமைச்சராக வருவது அவரது உரிமை. கூட்டணி பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்கு திமுக இன்னும் வரவில்லை என வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். முதல்வரை பாஜகதான் தீர்மானிக்குமென வானதி சீனிவாசன் கூறியதுபற்றி முதல்வர்தான் பதிலளிக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நவ.21,2020 | பிற்பகல் 3.59 மணி: இன்று மாலை 4.30 மணிக்கு அரசு விழாவில் அமித் ஷா பங்கேற்கவுள்ள நிலையில், தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் அமைச்சர் ஜெயக்குமார் அமிஷ் ஷாவை சந்தித்துள்ளார்.

நவ.21,2020 | பிற்பகல் 3.42 மணி: ''சென்னை வந்தடைந்தேன், தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!'' என்று அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

நவ.21,2020 | பிற்பகல் 3.25 மணி: தமிழகத்தில் அமித் ஷா வருகை தந்துள்ள நிலையில் #GoBackAmitShah என்ற ஹேஷ்டேக்கில் தற்போதைய நிலவரப்படி, ஏறத்தாழ 4 லட்சம் பதிவுகள் ட்வீட்டாக இடப்பட்டுள்ளன. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

நவ.21,2020 | பிற்பகல் 3.18 மணி: அமித் ஷா வருகை யாருக்கு பயம்? - சிறப்பு விவாதம் வீடியோ இங்கே...

நவ.21,2020 | பிற்பகல் 3.05 மணி: சென்னையில் தொண்டர்களை நோக்கி கையசைத்து சென்ற அமித் ஷாவை நோக்கி பதாகை வீசிய நபரை போலீஸார் கைதுசெய்து அவரிடன் விசாரணை நடத்தினர். பதாகை வீசியதாக கைது செய்யப்பட்ட துரைராஜ் மனநலம் குன்றியவர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நவ.21,2020 | பிற்பகல் 2.45 மணி: அமித் ஷா வருகையால் சென்னை கிண்டி, திரிசூலம், மீனம்பாக்கம், ஈக்காடுதாங்கல், அசோக் நகர் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நவ.21,2020 | பிற்பகல் 2.35 மணி:  உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்தடைந்தார். முன்னதாக  சாலையில் நடந்துசென்ற அமித்ஷா மீது சாலை ஓரம் நின்ற ஒருவர் பதாகையை வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 நவ.21,2020 | பிற்பகல் 2.30 மணி  சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்தடைந்தார். 

 நவ.21,2020 | பிற்பகல் 2.17மணி   சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு  பாஜக, அதிமுக தொண்டர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

 நவ.21,2020 | பிற்பகல் 2.05 மணி விமான நிலையத்திலிருந்து வெளியேறிய அமித் ஷா  திடீரென்று  காரை பாதியில் நிறுத்தி நடைபயணம் செய்தார். சாலையில் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமாக கையசைத்து வரவேற்பு அளித்தனர்.

நவ.21,2020 | பிற்பகல் 2.00 மணி:  சென்னை விமான நிலையம் வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா வை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

நவ.21,2020 | பிற்பகல் 1.52 மணி:

சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

நவ.21,2020 | பிற்பகல் 1.40 மணி:

அமித் ஷாவை வரவேற்க சென்னை விமான நிலையம் பகுதியில் பாஜக, அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

நவ.21,2020 | பிற்பகல் 1.10 மணி:

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முக்கியத் தலைவருமான அமித் ஷாவை வரவேற்க, சென்னை விமான நிலையம் பகுதியில் பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கள நிலவரம் லைவ் வீடியோ வடிவில்... | செய்தியாளர்: ரமேஷ்

தொடர்புடைய முக்கியச் செய்திகள்:

> மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகையை எதிர்த்தும் ஆதரித்தும் சமூக வலைதள ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக் யுத்தம் நடந்து வருகிறது. > விரிவான செய்தி: அமித் ஷாவின் தமிழக வருகையை எதிர்த்தும் ஆதரித்தும் 'ஹேஷ்டேக் யுத்தம்'! 

> தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். > சற்றே விரிவான செய்தி: அமித் ஷா இன்று தமிழகம் வருகை! - தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை? 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com