நள்ளிரவு வரை நீடித்த அமித் ஷா - குருமூர்த்தி ஆலோசனை!
கூட்டணியை தாங்கள் பார்த்துக் கொள்கிறோம், தேர்தல் பணிகளை கவனியுங்கள் என கட்சி நிர்வாகிகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்றும் கட்சியினர் மத்தியில் அவர் பேசி உள்ளார்.
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில், பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மாநிலத் தலைவர் எல்.முருகன், வருகிற தேர்தலில், பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையை அலங்கரிப்பார்கள் எனத் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து பேசிய அமித் ஷா, கூட்டணியை தாங்கள் பார்த்துக் கொள்கிறோம், தேர்தல் பணிகளை கவனியுங்கள் என கட்சி நிர்வாகிகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். மேலும், பூத் கமிட்டியை வலுப்படுத்துமாறும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார். அந்தவகையில் இப்போதிலிருந்து பணியாற்றினால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை கொண்டுவரமுடியும் எனவும் அமித் ஷா பேசியதாக சொல்லப்படுகிறது.
மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு, வேல் மற்றும் முருகன் சிலையை பாஜகவினர் நினைவு பரிசாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், பாஜகவில் புதிதாக இணைந்தவர்களை அமித் ஷாவிடம் அறிமுகப்படுத்திய போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்தையும், பாஜக உறுப்பினராக அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார். அமித் ஷா தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு இரவு 11 மணியவில் குருமூர்த்தி சென்றார். பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்த ஆலோசனை நள்ளிரவு வரை நீடித்தது. அப்போது பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.