”தமிழ்நாட்டில் இருந்து திமுக துடைத்து எறியப்படும்” - மத்திய அமைச்சர் அமித் ஷா நேரடி சவால்!
அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அடுத்த ஆண்டில் பிஹாரை போலவே தோல்வியடையும் என சவால் விடுத்தார். காங்கிரஸ் மற்றும் அதன் துணைக்கட்சிகளை மக்கள் விரும்பவில்லை என்றும் கூறினார்..
குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூன்று புதிய விளையாட்டு வளாகங்கள் உட்பட சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..
அப்போது பேசிய அமித் ஷா, பிஹார் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மக்கள் விரும்பவில்லை என்றும், பிஹாரை போல அடுத்த ஆண்டில் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் துடைத்து எறியப்படும் என சவால் விடுத்தார்..
நிகழ்ச்சியில் பேசிய அவர், "2014 மக்களவைத் தேர்தலிலிருந்து 2025 வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ச்சியான வெற்றிகளின் காலமாக இருந்து வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலில், நமது தலைவர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று, பல தசாப்தங்களுக்குப் பிறகு சாதனை படைத்தார்.
நாட்டின் மக்கள் காங்கிரசையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையாகியுள்ளது. பிஹார் தேர்தலை போலவே, தமிழகம் மற்றும் மேற்குவங்கத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் துடைத்து எறியப்படும். இன்று இந்த மேடையில் இருந்து, மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலினை நான் தயாராக இருக்கச்சொல்கிறேன்” என நேரடியாக சவால் விடுத்தார்.

