ஆம்பூர்: எதிர்ப்பை மீறி கடைசி நேரத்தில் ஓடோடி வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்த பெண்-வீடியோ

ஆம்பூர்: எதிர்ப்பை மீறி கடைசி நேரத்தில் ஓடோடி வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்த பெண்-வீடியோ
ஆம்பூர்: எதிர்ப்பை மீறி கடைசி நேரத்தில் ஓடோடி வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்த பெண்-வீடியோ

ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சிப் பகுதியில் மலைகிராம மக்கள், ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இறுதிநாளான இன்று வரை 9 வார்டுகளிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மக்களின் எதிர்ப்பை மீறி இன்று பெண் ஒருவர் இறுதி நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு எதிராக அம்மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்தத் தொகுதியை, பட்டியலின மக்கள் போட்டியிடும் தொகுதியாக ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, மக்களின் எதிர்ப்பை மீறி வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார் இந்துமதி என்ற பெண். தற்போது அவருடன் மக்கள் வாக்குவாதம் செய்துவருகின்றனர். நிகழ்வு குறித்து இந்துமதி நம்மிடையே தெரிவிக்கையில், “தொடர்ந்து 10 நாள்களாக எங்களை இங்குள்ள மக்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். நான் கலப்பு திருமணம் செய்திருந்தேன் என்பதாலும் இந்த எதிர்ப்பு இருக்கிறது” என்றார். இறுதி நேரத்தில் இந்துமதி ஓடோடி வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்ணின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என மக்கள் வலியுறுத்தி மறியல் செய்துவருகின்றனர். ‘‘வேட்பு மனுத்தாக்கல் செய்த பெண்ணின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படும்’’ என திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இவர் தலைமையில், இந்துமதியின் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்றைய தினம் ஒரு நபரொருவர் வேட்பு மனு செய்திருந்தார். அவர்களையும் மக்கள் எதிர்த்ததால், அவர்கள் தங்களது மனுவை திரும்பப்பெறுவதாக தெரிவித்துவிட்டனர். ஆகவே தற்போதைய நிலவரப்படி இந்துமதி ஒருவர் மட்டுமே அத்தொகுதிக்கு மனுதாக்கல் செய்திருக்கிறார். அதனால் இவர் மட்டுமே போட்டியின்றி தேர்வாகும் சூழலும் அங்கு நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com