ஆம்பூரில் சாலையின் தடுப்புச் சுவர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழந்தான்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் தனுஜன். ஆம்பூரில் உள்ள பள்ளியின் விடுதியில் தங்கி 6ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் தேர்வு முடிந்து விடுமுறை என்பதால் தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அப்போது அவர்கள் சென்ற வாகனம் பச்சகுப்பம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவன் தனுஜன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்ட பொதுமக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மாணவன் தனுஜன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார்.