‘நான் வலியில் துடிச்சப்போ அங்கிருந்தவங்க வேடிக்கை பாத்தாங்க’- பாதிக்கப்பட்ட சூர்யா பிரத்யேக பேட்டி

“கட்டிங் பிளேயர் கொண்டு தனது பல்லை பிடுங்கும் போது, ரத்தம் சொட்ட சொட்ட வலியில் துடித்ததை சுற்றிலும் இருந்த காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்தது மிகவும் கஷ்டமாக இருந்தது”

பல் பிடுங்கப்பட்ட வழக்கில் பிறழ் சாட்சியாக மாறி தற்போது ஐஏஎஸ் அதிகாரி அமுதாவிடம் உண்மையை கூறிய இளைஞர் சூர்யா புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

Balveer singh
Balveer singh

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பல் உடைக்கப்பட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தன் பல் உடைக்கப்பட்டதாக புகார் கூறிய ஜமீன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர், பின்னர் சார் ஆட்சியர் விசாரணையில் கீழே விழுந்து பல் உடைப்பட்டதாக பிறழ் சாட்சியம் அளித்தார்.

இதனையடுத்து நடைபெற்ற உயர்மட்டக்குழு அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ்.-ன் இரண்டாம் கட்ட விசாரணையில் சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, முதல் ஆளாக வந்து தனது பேரனை காணவில்லை என்றும், சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதற்காக தனது பேரனை காவல்துறை அழைத்துச் சென்று பல்லை உடைத்தார்கள் என்றும் கூறி வேதனையுடன் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் பேரனை காணவில்லை என்ற தாத்தாவின் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார் அதிகாரி அமுதா. இதனையடுத்து காவல்துறையினர், மாமியார் வீட்டில் தங்கியிருந்த சூர்யாவை கண்டறிந்தனர். உடனடியாக வீடியோ கால் மூலம் சூர்யாவை அமுதா ஐஏஎஸ் அதிகாரியிடம் பேச சொன்னர்.

தனக்கு நேர்ந்த பல் உடைப்பு சம்பவங்கள் குறித்து விசாரணை அதிகாரி அமுதாவிடம் பேசிய சூர்யா, புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “எங்கள் ஊரில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போதையில் இரவில் உடைத்து விட்டேன். மறுநாள் காவல்துறையினர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். சட்டையை கழற்றி காவலர்கள் கம்புகளைக் கொண்டு அடித்தனர்.

ஏ.எஸ்.பி. பல்வீர் சிங், கட்டிங் பிளேயர் கொண்டு என் வாயில் ஒரு பல்லை பிடுங்கி விட்டார். வலி தாங்காமல் அழுதேன்; வாயிலிருந்து ரத்தம் பனியன் வரை வடிந்து கொண்டே இருந்தது.
- பாதிக்கப்பட்ட சூர்யா புதிய தலைமுறைக்கு பேட்டி

‘உடைத்த 4 கேமராக்களுக்கு பதிலாக எட்டு கேமராக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்’ எனக் கூறினர்.

இதையடுத்து 45 ஆயிரம் ரூபாயை எனது அத்தை காவல்நிலையத்தில் கொடுத்து விட்டார். உடனே என்னை வாயை கழுவச் சொல்லிவிட்டு வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் அனுப்பி விட்டனர். அதற்குப் பிறகு என் அத்தை வீட்டில் இருந்து விட்டேன். சார் ஆட்சியர் விசாரணையில் ‘கீழே விழுந்து பல் உடைந்ததாக’ கூறச் சொன்னார்கள். காவல்துறையின் மிரட்டலுக்கு பயந்து அப்படியே கூறினேன். கேமராவை உடைத்ததற்காக என்னிடம் வாங்கிய 45 ஆயிரம் ரூபாயை போலீசார் திரும்பக் கொடுத்து விட்டனர். இந்த சூழலில் எனது தாத்தா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் என்னை வந்து பார்த்தனர். உடனடியாக வீடியோ காலில் அதிகாரியிடம் பேச சொன்னார்கள்.

பல்வீர் சிங்
பல்வீர் சிங்pt desk

அதன்படி, அதிகாரி அமுதாவிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினேன். நான் இந்த தண்டனை கொடுக்கும் அளவிற்கு பெரிதாக தப்பு ஒன்றும் செய்யவில்லை. குடிபோதையில் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு அதற்கான அபராதம் கட்ட தயாராகி விட்டேன். ஆனால் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே என்னை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்.

கட்டிங் பிளேயர் கொண்டு எனதுப் பல்லை பிடுங்கியதும் வாயில் இருந்து ரத்தம் பனியன் வரை வடிந்து கொண்டே இருந்தது. என்னை சுற்றிலும் இருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

பாதிக்கப்பட்ட சூர்யா புதிய தலைமுறைக்கு பேட்டி

எனக்கும், என் குடும்பத்திற்கும் எந்த ஒரு பாதிப்பு வந்தாலும் அதற்கு முழு காரணம் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தினர் தான் என்பதை முழு மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசி முடித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com