“ஆண்டவருக்கும், நாட்டை ஆண்டு கொண்டிருப்பவருக்கும் நன்றி” - தமிழிசை
எப்போதுமே நான் தமிழ்நாட்டு மக்களின் சகோதரிதான் என்று தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் தமிழிசை சௌந்திரராஜன். கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இதுபற்றி தமிழிசை சௌந்தரராஜன் கூறும்போது, “எதிர்பாராத நேரத்தில் இந்தப் பதவி எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் மகிழ்ச்சி. கடும் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆண்டவனுக்கும், நாட்டை ஆண்டு கொண்டிருப்பவருக்கும் பிரதமர் மோடிக்கும் மனமார்ந்த நன்றி. ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி. தமிழக பாஜக தலைவராக இருந்த எனக்கு அதை விட பெரிய பதவி கொடுத்துள்ளது கட்சித் தலைமை. எல்லோரும் ஒரே நாடு என்ற எண்ணத்துடனே நான் தெலங்கானா செல்கிறேன்; என்றுமே தமிழக மக்களுக்கு நான் சகோதரிதான். விமர்சனங்களை தாங்கிக் கொண்டால் விமர்சையாக மாறலாம்.” என்று தெரிவித்துள்ளார்.