பொன்.மாணிக்கவேல் மீது நம்பிக்கையில்லை.. அனைத்து வழக்குகளும் சிபிஐக்கு மாற்ற முடிவு !
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்படவில்லை என்றும், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் அரசுக்கு ஒரு அறிக்கை கூட வழங்கவில்லை என்றும் தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.ஹெச். அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார். மேலும், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ தான் விசாரிக்கும் என்றும் அரவிந்த் பாண்டியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மாநில அரசு காவல்துறை மீது உங்களுக்கே நம்பிக்கையில்லையா என நீதிமன்றம் எழுபியப்கேள்விக்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், காவல்துறை விசாரித்தவரை முறையாகத்தான் இருந்தது, ஆனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட ஓராண்டில் என்ன நடந்தது என தெரியவில்லை என தெரிவித்தார்.
வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவு குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் விசாரணை நிலைஅறிக்கையும், ஸ்ட்ராங் ரூம்கள் அமைப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.