சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க அரசாணை
சென்னை பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியின் பரிந்துரையை ஏற்று சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணையின் கீழ் இப்போதுள்ள வழக்குகள் மற்றும் எதிர்காலத்தில் எழக்கூடிய வழக்குகளையும் சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. பழங்கால, அரிய சிலைகள் திருட்டு தொடர்பான வழக்குகளில் மாநிலங்கள், சர்வதேச தொடர்புகள் இருப்பதால் சுங்கத்துறை, வெளியுறவு மற்றும் மத்திய உள்துறை ஆகியவற்றின் உதவியுடன் விசாரிக்க வேண்டியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், வெளிநாட்டு அரசுகள், இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சிலைக் கடத்தல் வழக்குகளை மிகத் தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளதால், உயர்நிலை அமைப்புகள், புலனாய்வு ஏஜென்சிகள் மூலம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையும் அதுதொடர்பான ஆணை மற்றும் முடிவுகளை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியதையும் அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் அரசு கவனமாக பரிசீலித்ததில், சிலைக்கடத்தல் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வரும் வழக்குகளையும், எதிர்காலத்தில் எழக்கூடிய வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றும் கூடுதல் டிஜிபியின் முடிவை ஏற்று இந்த அரசாணை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.