“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா

“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா

வாணியம்பாடியில் வேலூர் மண்டல ஆலோசனை கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மண்டல நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மண்டல பொறுப்பாளர் ஞானதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ராதிகா சரத்குமார், ’’என் கணவர் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் மசூதிகள், சர்ச்சுகள், மற்றும் கோயில்களில் பிரார்த்தனை நடத்திய பொது மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். சாதி, மதம் கடந்து பழகக்கூடியவர் அவர். திருமணத்திற்கு முன்பு இருந்தே அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் அவருடன் பழகியவர்களுக்கு மட்டும்தான் அது புரியும்.

சின்னத்திரை தொடர்களில் தொடர்ந்து நடித்துவந்ததால்தான் என்னால் அரசியலில் ஈடுபட முடியவில்லை. எதிர்வரும் காலங்களில் தலைவருடன் சேர்ந்து கண்டிப்பாக அரசியலில் அதிகமாக ஈடுபட உள்ளேன். பணம் இல்லாமல் உணர்வோடு செயல்பட்டால் மாற்றத்தை உருவாக்க முடியும். ’எங்களுடைய நோக்கம் வெற்றி, எங்களுடைய நோக்கம் வளர்ச்சி’ என்று செயல்பட வேண்டும். 2021ஆம் ஆண்டு நல்லதொரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். மாற்றத்தை உருவாக்க நல்லமுறையில் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் லட்சியத்தையும், வெற்றியையும் அடையமுடியும்’’ என்று பேசினார்.

அவரைத்தொடர்ந்து கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் பேசியபோது, ’’புரட்சித்தலைவர் எம்ஜிஆர்-இன் ரசிகர்களுடன் பயணித்த நான் அந்த அளவுக்கு உயராவிட்டாலும் ஒரு ரசிகனாக, நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக என்னை ஏற்றுகொண்டது சமத்துவ சொந்தங்களாகிய நீங்கள் மட்டும்தான்.

13 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தை நடத்துகிறோம் என்று சொன்னால் அது சாதாரண விஷயம் அல்ல; ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நமது உடம்பில் ஓடும் ரத்தம் சிவப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கும் சமத்துவம் வருகிறது. இப்படி சமத்துவம் வரும்போதுதான், ஒற்றுமை இருக்கும்போதுதான் நமது நாடும், வீடும், சமுதாயமும் சிறக்கும் என்றும் கொள்கையின் அடிப்படையில் சமத்துவ மக்கள் கட்சி துவங்கப்பட்டு தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ரசிகர்களாக இருந்து விடாதீர்கள் அரசியல்வாதிகளாக மாறுங்கள் என்று சொல்வதற்குத்தான் இந்த ஆலோசனை கூட்டம். உங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இங்கு வந்திருக்கிறேன். கூட்டணியில் தொடர்ந்து நீடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் ஒரு சீட்டில் இரண்டு சீட்டில் நிற்பேன் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள். தனி சின்னத்தில்தான் போட்டியிடுவேன். எனக்கு கொடுக்கவில்லை என்று சொன்னாலும் பரவாயில்லை. இது யாரையும் எதிர்ப்பதற்கோ, கூட்டணி தர்மத்தை உடைப்பதற்கோ அல்ல; உங்களை உருவாக்கத்தான்’’ என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com