மருத்துவப்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு: மாநில அரசின் உரிமைகள் பறிபோகின்றனவா?
தமிழகத்தில் இடஒதுக்கீடு பிரச்சினை எப்போதும் பேசும்பொருளாகவே இருந்துவருகிறது. அண்மையில் கிரிமிலேயர் யார் என்பது குறித்து பி.பி.சர்மா குழு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரைகள் சர்ச்சையை உருவாக்கின. ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்து அடங்கியுள்ளது.
இந்த நிலையில், தற்போது மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவது பற்றிய பிரச்சினை உருவெடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை முடித்துவைத்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 27 ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ. கருணாநிதி, “அகில இந்திய மருத்துவப் படிப்புக்கான ஓதுக்கீட்டில் பட்ட மேற்படிப்புக்கு கவுன்சலிங் நடைபெற்றது, அனைத்து மாநிலங்களையும் சேர்த்து 7981 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்திற்கு 940 இடங்கள். ஒரு விழுக்காடு இடம்கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவில்லை. கடந்த பல ஆண்டுகளாகவே பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பில் எந்த இடங்களும் வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில் 3 ஆயிரம் இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துவருகிறார்கள். இடஒதுக்கீடு வழங்காமல் இருப்பது சட்டப்படி தவறானது. இதுவொரு சமூக அநீதி, அதனால்தான் எங்கள் இயக்கும் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினரும் சேர்ந்து போராடுகிறோம்” என்றார்.
மருத்துவப் படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி திமுக, அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக, திராவிடர் கழகம், மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற அனுமதிக்கலாம். ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். திமுக, அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தனி மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.
“உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்கமுடியும். மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இடஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது”என அவர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். இடஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு திருடிக்கொண்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், “தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை இருக்கும்போது மத்திய அரசு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தவறானது. தமிழகத்தில்தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். பட்டியலின பழங்குடியின பிரிவினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுப்பது சட்டவிரோதமானது" என்று வாதிட்டார்.
இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் பி.ஆர்.ராமன், மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மத்திய அரசு வாதத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுபடியே ஆதிதிராவிட மற்றும் பழங்குடி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும், மருத்துவ மேற்படிப்புகளில் ஒபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற்கான பல உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாகவும் மேற்கோள் காட்டினர், அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரம்பாமல் இருந்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநில அரசுகளின் ஒதுக்கீடு முறையைப் பின்பற்றவேண்டும் என்ற முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏன் மத்திய அரசு கட்டுப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜூலை 27 ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினரை தொடர்ந்து புறக்கணித்துவருகிறார்கள். மாநில அரசிடம் இருந்து பெற்ற இடங்களில் அவர்களுக்கு இடமே அளிக்கப்படவில்லை. மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினரின் நிலை பூஜ்யமாக உள்ளது” என்று கவலை தெரிவித்தார்.