இளைஞர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும்: அலங்காநல்லூர் மக்கள்
ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அலங்காநல்லூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நேற்று காலை கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். நேற்று காலை சுமார் 9 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் 22 மணி நேரத்துக்கும் மேலாக இன்று காலை வரை தொடர்ந்தது. போராட்டக் களத்திலேயே இரவு உணவையும் சமைத்து உண்ட போராட்டக்காரர்கள், வாடிவாசலில் காளைகளை அவிழ்த்து விடும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி தொடர்ச்சியாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர். அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், அவர்களை போலீசார் இன்று காலை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் அழைத்துச் சென்று வாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதையடுத்து அலங்காநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அலங்காநல்லூர் பொதுமக்கள் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதேகோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினாவிலும் இளைஞர்கள், தன்னார்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களை விடுவிக்கக் கோரி வாடிப்பட்டி அருகிலும், புதுக்கோட்டையிலும் சாலைமறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது.