மாலை 6 மணிக்குள் அவசர சட்டம்: அலங்காநல்லூர் மக்கள் கெடு
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தினை மாலை 6 மணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அலங்காநல்லூர் கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வருகின்ற சூழலில், அலங்காநல்லூரிலும் போராட்டம் மேலும் மேலும் வலுப்பெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்துள்ள இளைஞர்களுடன் அலங்காநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தசூழலில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தினை மாலை 6 மணிக்குள் பிறப்பிக்க வேண்டும் என்று அலங்காநல்லூர் மக்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு விதித்துள்ளனர். அலங்காநல்லூரில் நடந்த கிராம மக்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர சட்டம் இயற்றப்படவில்லை என்றால் இந்த போராட்டம் காலவரையற்ற போராட்டமாக மாறும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.