அக்கரை டூ முட்டுக்காடு: சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் பயணம் மேற்கொள்ள தனி பாதை
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை முதல் முட்டுக்காடு வரையிலான 15 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்வோருக்கான தனி வழி பாதை ஒதுக்கப்பட்டு, சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகரில் அடையாறு பகுதியில் காலையில் சைக்கிள் பயணம் மூலம் உடற்பயிற்சி மேற்கொள்வோர்களின் பாதுகாப்புக்காகவும், வாகனங்களின் வேகத்தால் பயமின்றி உடற்பயிற்சி மேற்கொள்ளவும், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வோருக்கு பாதுகாப்பான வழி அமைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒருங்கிணைந்து, கிழக்கு கடற்கரை சாலையில், அக்கரை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரையிலான 15 கி,மீ. தூர பாதையில், தற்காலிகமாக சைக்கிள் பயணம் மேற்கொள்ள தனி பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இன்று (25.12.2021) காலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரையிலான சைக்கிள் பயணத்திற்காக அமைக்கப்பட்ட தனி வழியில் சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை விளையாட்டு பிரிவைச் சேர்ந்த 40 காவல் ஆளிநர்கள் மற்றும் 150 பொதுமக்களுடன், சைக்கிள் பயண சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மேலும், இந்த நேரத்தில், இதே வழித்தடத்தில், இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல், அடையாறு துணை ஆணையாளர் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் (தெற்கு) தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்புடன் சைக்கிள் பயண சோதனை ஓட்டம் இனிதே முடிவடைந்தது.
சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின்படி சைக்கிள் பயணம் பாதுகாப்பானதாகவும், சிறந்த முறையில் நடந்ததாகவும், இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், சைக்கிள் பயணத்தில் பங்கு பெற்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், நாளை (26.12.2021) காலை இதே வழித்தடத்தில் மீண்டும் சைக்கிள் பயண சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும், இனி ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 05.00 மணி முதல் 08.00 மணி வரை அக்கரை முதல் முட்டுக்காடு வரையில் சைக்கிள் பயணத்திற்கான தற்காலிக ஒருவழி பாதை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.