ஆகாஷ் பாஸ்கரன்
ஆகாஷ் பாஸ்கரன்pt

சல்லடை போடும் அமலாக்கத்துறை.. பினாமி நிறுவனமா டான் பிக்சர்ஸ்? யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் ரத்தீஷைச் சுற்றி அமலாக்கத்துறை விசாரணை வேகமெடுத்திருக்கிறது. யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன் என்பதை பார்க்கலாம்.
Published on

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை வேகமெடுத்திருக்கிறது. இந்த நிலையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் நெருங்கிய நண்பராக அறியப்படும் ரத்தீஷைச் சுற்றி விசாரணை வேகமெடுத்திருக்கிறது. குறிப்பாக, ‘ரெட் ஜெயிண்ட் மூவிஸின்’ பினாமியாக ‘டான் பிக்சர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டதா? என்று அமலாக்கத்துறையினர் விசாரணையில் இறங்கி இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் நடப்பது குறித்தும், ஆகாஷ் பாஸ்கரனின் பின்னணி குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

ஆகாஷ் பாஸ்கரன்
ஆகாஷ் பாஸ்கரன்
ஆகாஷ் பாஸ்கரன்
"தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? .." - முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பிய இபிஎஸ்!

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரான ரத்தீஷ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதில், பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் ஆகியோர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ED சோதனையின் போது, ரத்தீஷ் வீட்டைக் பூட்டி விட்டு தப்பி சென்றுள்ளார். மேலும், ஆகாஷ் பாஸ்கரனும் தலைமறைவாகி விட, அவரது வாகன ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரன் நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில், அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால், ஆகாஷ் பாஸ்கரன் குறித்த விசாரணை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு செய்த பணத்தில், "டான் பிக்சர்ஸ்" என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆகாஷ் பாஸ்கரன் தொடங்கினாரா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சரி.. யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

திரைத் துறையில் சமீப நாட்களாக அனைவராலும் பேசப்படும் நபராக மாறி இருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன். கடந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற இவரின் திருமணத்தில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றது, பெரும் பேசும் பொருளாக இருந்தது.

சேலம் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஆகாஷ் பாஸ்கரன், திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். "நானும் ரௌடி தான்" என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர், அதன் பிறகு "காத்து வாக்குல ரெண்டு காதல்", "பாவ கதைகள்", "அமரன்" ஆகிய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

இதன் பிறகுதான் "டான் பிக்சர்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார். இவரின் தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள "இட்லி கடை" திரைப்படம், விரைவில் வெளியாக இருக்கிறது. அதேபோல, சிவகார்த்திகேயன் நடித்துள்ள "பராசக்தி" திரைப்படம், அதர்வா நடித்துள்ள 'இதயம் முரளி", சிம்புவின் 49 வது திரைப்படம் என்று ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து வருகிறார் ஆகாஷ் பாஸ்கரன்.

இந்த திரைப்படங்களுக்கான பட்ஜெட், சுமார் 500 கோடி வரை இருக்கும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு குறுகிய காலத்தில், எப்படி இத்தனை திரைப்படங்களை இவரால் தயாரிக்க முடிகிறது.. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? என்று திரைத்துறையினரே பல்வேறு கேள்விகளை முன் வைக்கின்றனர்.

இந்தநிலையில்தான், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகாஷ் பாஸ்கரனுடைய வீட்டில் சோதனை மேற்கொண்டு, அவரை மையப்படுத்தி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். டாஸ்மாக்கில் நிகழ்ந்த ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பான விஷயத்தில், இவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஆகாஷ் பாஸ்கரன்
டெல்லி|நடுவானில் கொட்டிய ஆலங்கட்டிகள்... சேதமடைந்த விமானம்; என்ன நடந்தது?

மேலும், "ரெட் ஜெயண்ட் மூவிஸின்" பினாமியாக "டான் பிக்சர்ஸ்" தொடங்கப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்திருப்பதால், அது குறித்தும்.. டான் பிக்சர்ஸ் தயாரிப்பிற்கு பணம் எங்கிருந்து வந்தது? என்பது குறித்தும், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் அவர் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக, வாளாடி கார்த்தி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு ஆகாஷ் பாஸ்கரன் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. ஆகாஷ் பாஸ்கரின் திடீர் வளர்ச்சிக்கு இதுவும் காரணமா? என்ற ரீதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.

மேலும், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தலைமறைவாக உள்ள ரத்தீஷ் ஆகியோருக்கிடையே என்னென்ன தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும்.. டான் பிக்சர்ஸ் வரவு செலவு பரிவர்த்தனை குறித்தும் ஆதாரங்களை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ஆகாஷ் பாஸ்கரனின் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் யார்? யார்?.. அரசியல் வட்டாரங்கள் யார்? யார்?. இவரின் கடந்த கால பயணங்கள் என்ன? என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகாஷ் பாஸ்கரனுடைய குறுகிய காலத்தில் அதீத வளர்ச்சி எப்படி வந்தது? இவருக்கு உதவி புரிந்த நபர்கள் யார்? இவரது சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு பணம் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது? என்பது குறித்த முழு தகவல்களும் விசாரணையின் முடிவில் வெளிவரும் என்கின்றனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com